சென்னை: அமெரிக்க அரசின் வரி விதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான 50 சதவீத வரி விதிப்பை கண்டித்தும், நாட்டின் சுயசார்பு, ஏற்றுமதி தொழில்கள், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்க வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடந்த போராட்டத்துக்கு சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம்எல் மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
இரா.முத்தரசன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் ஒருவருக்கொருவர் மாறிமாறி தேர்தல் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இவர்களது நட்பு இந்தியாவுக்கு பலனளிக்கவில்லை. ஒரு சுயச்சார்புள்ள நாடு மற்றொரு நாட்டோடு உறவு வைத்துக் கொள்வது அந்நாட்டின் இறையான்மை.
ஆனால் அமெரிக்க அதிபர், தான் சொல்கிற நாடுகளிடம் மட்டும்தான் வர்த்தகம் செய்ய வேண்டுமென்று சட்டாம்பிள்ளைத்தனமாக கூறுகிறார். அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதி அடையாமல், இடதுசாரிகள் உள்ளிட்ட பிற கட்சிகளோடு கலந்து பேசி மாற்றுக் கொள்கையை உருவாக்கி இந்திய தொழில்களை, தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்.
பெ.சண்முகம்: டிரம்ப் என்ற தனி நபரின் விருப்புவெறுப்பால் விதிக்கப்பட்டுள்ள வரியால் பல நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான முதலாளிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் ஏராளமான வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பூர் ஜவுளி உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் தோல் தொழில் முடங்கும் நிலை உள்ளது. ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முந்திரி தொழிலில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை சரிசெய்ய அவசர உணர்வுடன் ஆக்கப்பூர்வமாக மத்திய அரசு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.