மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வருவது முதல்வருக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை புறநகர் மாவட்ட கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அமமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரை ஆலந்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2026-தேர்தல் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டது.
அதன்பின் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திமுகவை வீழ்த்த அனைவரும் ஒரணியில் திரண்டு வருகிறோம். ஊகங்களின் அடிப்படையிலேயே மத்திய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். மதுரைக்கு வந்த முதல்வரால் இந்த நகருக்கு என்ன நடந்தது?’ இந்த ஆட்சியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது தான் மிச்சம். சாக்கடை கால்வாயை துணியை வைத்து மூடியது தான் மிச்சம்.
முதல்வரை வரவேற்க பிரியாணி கொடுத்து லாரியில் ஆட்களை ஏற்றி வந்ததைப் பார்த்தேன். கருணாநிதி காலத்திலேயே தொடர்ந்து 10 ஆண்டு காலம் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் தத்தளித்தது. பாஜகவை காரணம் காட்டி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார். சிறுபான்மை மக்கள் உட்பட அனைவரும் திமுகவின் ஆட்சியை புரிந்து கொண்டார்கள். 2026-ம் ஆண்டில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும்.
அமித்ஷாவின் தமிழக வருகை முதல்வருக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. எத்தனை முறை அமித்ஷா தமிழகத்திற்கு வந்தாலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறுவது அவரது பயத்தின் வெளிப்பாடு. ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறார் என்பதை பாஜக தலைவர் பலமுறை உறுதி செய்துவிட்டார். அவருக்கு எல்லா முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் அவருக்கான முக்கியத்துவம் தெரிய வரும்.
அரசியலில் எந்த ஒரு முயற்சிக்குமே முற்றுப்புள்ளி கிடையாது. அதிமுக என்பது ஜெயலலிதாவின் கட்சி. அவரின் தொண்டர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் ஓரணியில் சேர்ந்தால்தான் தீய சக்தி திமுகவை வீழ்த்த முடியும். எங்கள் கூட்டணியில் உறுதியாக பல கட்சிகள் வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.