சென்னை: பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழு கவனம் செலுத்தி வருவதால், அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூலை 8-ம் தேதி சென்னை வர இருப்பதாகவும், அப்போது கூட்டணி கட்சி தலைவர்களைச் சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவரது சென்னை வருகை ரத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித் ஷாவின் சென்னை வருகையின்போது, அதிமுக – பாஜக கூட்டணியை பலப்படுத்துவதற்காக, பாமகவையும் கூட்டணியில் இணைக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால், ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் முடிவுக்கு வராததால், அமித் ஷாவின் பயணம் ரத்தாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், பாஜக தேசிய தலைமை மாற்றம் தொடர்பான பணிகளில் அமித் ஷா முழு கவனம் செலுத்தி வருவதால், கட்சியின் தேசிய தலைமை நியமனத்துக்குப் பிறகு அவர் தமிழகம் வருவார் என்று பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.