சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் மகத்தான வெற்றி பெறும் சூழ்நிலையை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் திருநெல்வேலி முதல் பூத் கமிட்டி பாஜக மாநாடு உருவாக்கும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு லட்சம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் திருநெல்வேலி முதல் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் முதல் கட்டமாக, ஒரு லட்சம் பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள், வீரத்தின் விளைநிலம் திருச்செந்தூர் முருகனின் ஆட்சி ஸ்தலம் திருநெல்வேலியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தேர்தல் பயிற்சி பெற்று ஆன்மிக அரசியல் ஆட்சி நடப்பதற்கு அடித்தளம் அமைக்கின்றனர்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத தீய சக்தி திமுகவை வீழ்த்தி கொடுங்கோல் ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பு வகையில் மாபெரும் அரசியல் திருப்புமுனை தாமரை சங்கமமாக பாஜகவின் மாநில அளவிலான முதல் பூத் கமிட்டி கமிட்டி மண்டல மாநாடு திருநெல்வேலியில் நாளை மறுநாள் ஆக.22-ஆம் தேதி மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது.
நெல்லை உள்பட 5 மக்களவை தொகுதிகள், 28 சட்டமன்ற தொகுதிகளுக்கு பூத் கமிட்டி மாநாடு நடக்கிறது. தென் மாவட்டங்களில் நெல்லை உள்பட ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட, 28 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, 8,595 பூத் கமிட்டிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளனர்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது இலக்கு என்ற அடிப்படையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில், திமுக அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கொள்ளையடித்த ஊழல் பணத்தை வீடு வீடாக விநியோகித்து மக்களிடம் ஓட்டுக்களை கொள்ளை அடிப்பதை தடுத்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகளை பெற்று தருவது இலக்கு என்ற லட்சியத்துடன் இந்த மாநாடு தொடங்குகிறது.
மத்திய பாஜக மோடி அரசு தமிழக மக்களுக்கு அளித்த எண்ணற்ற மக்கள் நல திட்டங்களையும், பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களின் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி செய்ததை ஒவ்வொருவரும் தங்களுடைய பூத்தில் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது,
திமுகவின் அராஜக மக்கள் விரோத கொடுங்கோல் ஆட்சியில் நடந்த கொலைகள் கொள்ளைகள் பாலியல் வன்கொடுமைகள், போதை கடத்தல்கள் கள்ளச்சாராய சாவுகள் மின்சாரம் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் விரோத செயல்களை ஒவ்வொரு வீடுகளில் உள்ள வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது,
மத்திய பாஜக அரசு மீதும், நரேந்திர மோடி மீதும் திமுக செய்யும் பொய்யான அவதூறு பிரச்சாரத்தை விளக்குவது உள்ளிட்ட ஒவ்வொரு பூத்தளவிலும் முழுமையாக அற்புத நட்புடன் தமிழகத்தில் நலனுக்காக தேச நலனுக்காக பணி செய்து 50 சதவீத வாக்குகளை பெறுவது என்ற அடிப்படையில் இந்த மாநாட்டில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு முழுமையான, ஊடகம், ஊடகங்கள் வாயிலாக வெற்றிகரமாக தேர்தல் பணியாற்றுவது உள்ளிட்ட அனைத்து விதமான தேர்தல் வழிமுறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.
மிக முக்கியமாக, முதல் பூத் கமிட்டி மாநாடு நடக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் தமிழுக்கும், தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில், தொடர்ந்து பணியாற்றி வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழக மக்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியோடு மத்திய பாஜக ஆட்சிக்கு பிரதமருக்கும் நன்றி சொல்லக் கூடிய வகையில், தமிழகத்தின் வளர்ச்சிக்காக தமிழகத்தின் மகிழ்ச்சிக்காக அரும்பாடு பட்டு வந்த மகராஷ்டிரா மாநில கவர்னர் சி பி ராதாகிருஷ்ணனை இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுத்து தமிழக மக்களின் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்திய பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மகிழ்ச்சியான செய்திக்கு மேலும் மகிழ்ச்சி சேர்க்கும் வகையில், இந்திய அரசியலில் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் முதல் மண்டல பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு மக்கள் விரோத ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்க இருப்பது திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளுக்கும் மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஊக்கம்பட்டி மாநாட்டிற்கு காவல்துறை மூலமாக திமுக அரசு மறைமுகமாக இடையூறுகள் ஏற்படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். திருநெல்வேலி பூத் கமிட்டி மாநாட்டில் மாநாட்டில் பேசப் போகும் அமித்ஷா, வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக தொண்டர்கள் எதிர்கொள்வதற்கான தெளிவான பாதையைக் காட்ட இருக்கிறார். திமுக கூட்டணிக்குச் சம்மட்டி அடி கொடுக்கும் வகையில் அமித்ஷாவின் வியூகம் இருக்கப் போகிறது.
போலி வாக்காளர்கள், கள்ள ஓட்டு, வாக்காளர்களுக்கு பணம் அளித்தல் மக்களை ஏமாற்றி ஜெயித்து வந்த அராஜக தேர்தல் பாணியை வீழ்த்தி பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பூத்தை வலிமையான 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறக்கூடிய பூத்தாக உருவாக்கி அமித்ஷா அவர்களுடைய வழிகாட்டலில் இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை படைக்க இருக்கிறார்கள்.
அமித்ஷாவின் திருநெல்வேலி பூத் கமிட்டி மாநாட்டு வருகை, தமிழக பாஜக தொண்டர்களில் மிகப்பெரிய எழுச்சியும் உற்சாகத்தையும் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.திருநெல்வேலி மாநாட்டை தொடர்ந்து, செப்.13-இல் மதுரை, அக்.26-இல் கோவை, நவ.23-இல் சேலம், டிச.21-இல் தஞ்சாவூா், அடுத்த ஆண்டு ஜன.4-இல் திருவண்ணாமலை, ஜன.24-இல் திருவள்ளூா் ஆகிய இடங்களில் மாநாடுகள் நடைபெறவுள்ளன.
தேசிய பாஜக தலைவர்கள் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டு பாஜக தொண்டர்களின் நிர்வாகிகள் உற்சாகப்படுத்த உள்ளனர்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தீய சக்தி திமுகவை விடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்கள் நல ஆட்சி அமைவதற்கான அடித்தளமாக திருநெல்வேலி பூத் கமிட்டி மாநாடு நடக்க இருக்கிறது. தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தர்ராஜன், அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, சரத்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் மகத்தான வெற்றி பெறும் சூழ்நிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் முதல் பூத் கமிட்டி பாஜக மாநாடு உருவாக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்