மதுரை: மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மதுரை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரம் காத்திருந்தனர்.
மதுரையில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் மதுரை விமான நிலையம் வருவதாக இருந்தது.
இதையடுத்து, அமித்ஷாவை வரவேற்க தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வந்தனர். இவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் வந்தனர்.
மதுரை ஒத்தக்கடையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்ட அரங்கப் பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டது. மத்தியப் பாதுகாப்புப் படை வசம் அரங்கத்தை ஒப்படைத்த பிறகே டெல்லியிலிருந்து அமித்ஷா புறப்படுவதாக இருந்தது. இதனால் தாமதமாகப் புறப்பட்டு, இரவு 10.30 மணிக்குத்தான் அமித்ஷா மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அவரை அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, காவல் ஆணையர் லோகநாதன், பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சி நிர்வாகிகளை அமித்ஷாவுக்கு அறிமுகப்படுத்தினார். பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களும் அமித்ஷாவை வரவேற்றனர். பின்னர், அமித்ஷா விமான நிலையம் அருகேயுள்ள தங்கும் விடுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.