சென்னை: அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நிலையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் முதன்முறையாக ஆஜராகி செந்தில்பாலாஜி நேற்று கையெழுத்திட்டார்.
கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக பதிவான வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
இந்த மூல வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் கணக்கில் வராத ரூ.1.34 கோடி பணம், அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி அவரை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பின்னர், அவர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தனது அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், 6 நிபந்தனைகளுடன் அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீன் வழங்கியது. அந்தவகையில், ஒவ்வொரு வாரமும் திங்கள், வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 11 முதல் 12 மணிக்குள் அமலாக்கத் துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். 3 மோசடி வழக்குகள் தொடர்பாக ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு ஆஜராக வேண்டும் என அந்த நிபந்தனைகளில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி, அவர் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய ஒரு நாள் இடைவெளியில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானார். இதுகுறித்து கடும் விமர்சனங்களை தெரிவித்த உச்ச நீதிமன்றம், ‘‘ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி ஏப்ரல் 28-ம் தேதிக்குள் முடிவு செய்து பதில் அளிக்க வேண்டும்’’ என்று கெடு விதித்தது.
இதன்தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இந்நிலையில், அமைச்சர் பதவி பறிபோன பிறகு முதல்முறையாக செந்தில் பாலாஜி திங்கட்கிழமையான நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி நிபந்தனை ஜாமீனுக்கான கையெழுத்திட்டு சென்றார்.