மதுரை: “தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் என்பது தென்னிந்திய வரலாறுக்கு மத்திய அரசு செய்யும் பாரபட்சமான நடவடிக்கை,” என்று என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கீழடி அகழாய்வு குழுவில் இருந்து பணியாற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இன்றைக்கு டெல்லியில் இருந்து நொய்டாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி ஆவணப்படுத்தும் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
ஓர் அதிகாரி பணியிட மாற்றம் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அது நிர்வாக நடைமுறையில் உள்ள ஒரு விஷயம்தான். ஆனால் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் விஷயத்தில், கடந்த எட்டு ஆண்டுகளாக கீழடி அகழாய்வில் அதன் உண்மைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாக பணியாற்றியவர். அப்படிப்பட்டவரை அகழாய்வை நீங்கள் தொடர வேண்டாம் என்று 2017-ம் ஆண்டு வெளியேற்றினர்.
அவர் மேற்கொண்ட கீழடி அகழாய்வின் அறிக்கையை நீங்கள் எழுத வேண்டாம். இன்னொரு அதிகாரி எழுத இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பிறகு நீதிமன்றத்தை நாடி, நான் அகழாய்வு செய்த இடம் குறித்து, நான் தான் அறிக்கை எழுத வேண்டும். அதுதான் மரபு என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் அந்த அறிக்கையை எழுத வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதற்குப் பிறகு கூட கவுகாத்தியில் இருந்து கோவாவுக்கு மாற்றப்பட்டார். சென்னைக்கு மாற்றவில்லை. ஆகையால் தான் அவர் அந்த ஆய்வு அறிக்கை எழுத முடியாமல் இருந்தது. பின்னர் நீதிமன்றத்தை நாடி தான் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகுதான் அவர் ஆய்வு அறிக்கை எழுதி ஒப்படைத்தார். ஒப்படைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
அந்த அறிக்கையை எப்போது வெளியிடுவீர்கள் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின்பு 11 மாதத்தில் வெளியிடுவோம் என்று ஏஎஸ்ஐ சொன்னது அதற்குப் பின்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். பின்னர் மத்திய கலாச்சார துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அதற்குப் பிறகு விரைவில் வெளியிடுவோம் என, நாடாளுமன்றத்தில் உறுதி கொடுத்தனர். அந்த உறுதி மொழியை காப்பாற்றவில்லை .
கூட்டத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே மே 21-ம் தேதி, நீங்கள் செய்த அகழாய்வுக்கு கூடுதல் அறிவியல் ஆதாரம் வேண்டும் என அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்தனர். கூடுதல் ஆதாரம் வேண்டும் என்றால், இவர்கள் நீதிமன்றத்திலேயே சொல்லி இருக்கலாம். நீதிமன்றத்தில் 11 மாதங்களில் அறிக்கை வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டு அல்லது நாடாளுமன்றத்தில் இந்த அறிவியல் ஆதாரங்கள் போதாது கூடுதல் அறிவியல் ஆதாரங்கள் வேண்டும் என சொல்லி இருக்கலாம்.
இதன் தொடர்ச்சி தான் மத்திய பண்பாட்டுத் துறை அமைச்சர் கடந்த 10-ம் தேதி சென்னையிலுள்ள பாஜக அலுவலகத்தில் வந்து இதை மண்டலமாக ( ரீஜினல்) பார்க்காதீர்கள். கூடுதலாக அறிவியல் ஆதாரம் தேவை என சொல்கிறார். இந்தப் பின்னணியில் தான் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆவணப்படுத்தும் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஒரு இயக்குநர். ஆனால் ஆவணப்படுத்தும் பிரிவுக்கு அவர் மாற்றப்படுகிறார். அங்கு எவ்வளவு பேர் பணியாற்றுகின்றனர் என கேட்டபோது, அனேகமாக இவர் மட்டும் தான் அனுப்பப்படுகிறார் என கதவல் கிடைத்துள்ளது. ஒரு ஆய்வை நடத்தியதற்காக ஒரு ஆய்வாளர் எப்படி எல்லாம் வேட்டையாடப்படுவார் என்பதை தமிழகத்துக்கு மத்திய அரசு நிகழ்த்தி காட்டிக்கொண்டே இருக்கிறது. நாங்கள் விரும்புவதைப் போல் நீங்கள் இல்லை என்றால் எங்களுடைய கருத்துக்கு நீங்கள் இசைவாக இல்லை எனில் என்னவெல்லாம் செய்வோம் என்று மத்திய அரசு செய்கிறது.
மே 23-ம் தேதி இந்தப் பிரச்சினை குறித்த அறிக்கையை நான் வெளியிட்டேன். அன்றிலிருந்து இன்று வரை 20 நாட்களாக தமிழ்நாட்டில் பேசும் பொருளாக ஆய்வறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தமிழக முதல்வர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசிக் கொண்டே இருக்கும் நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, தென்னிந்தியாவுக்கு எதிராகவும், தென்னிந்தியாவின் வரலாற்றுக்கு எதிராகவும் மத்திய அரசு எடுக்கும் பாரபட்சமான நடவடிக்கை இது. இதன் மூலம் வரலாற்று உண்மைகளை மறைத்து விட முடியும் என்ற மத்திய அரசின் இச்செயலுக்கு தமிழக மக்கள் அரசியல் களத்தில் பதிலளிப்பர்” என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின் போது, புறநகர் மாவட்ட செயலாளர் கே ராஜேந்திரன், பா.ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.