விழுப்புரம்: அன்புமணியின் நடைபயணத்தை மக்களும், கட்சியினரும் ஏற்க மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமகவின் வேர் தைலாபுரத்தில் மட்டும்தான் இருக்கிறது. கட்சிக்கு நிறுவனர்-தலைவர் இரண்டும் நான்தான். பாமக தலைவர் என்று வேறுயாரையும் (அன்புமணி) குறிப்பிடக் கூடாது. தலைமைக்கும், தலைவருக்கும் கட்டுப்படாமல் யாத்திரை செல்வதால் துளியும் பயனில்லை. தொண்டரும், மக்களும் அன்புமணியின் நடைபயணத்தை ஏற்க மாட்டார்கள்.
இது தொடர்பாக காவல் துறை மற்றும் உள்துறை தலைமைக்கு முறைப்படி புகார் கொடுத்துள்ளோம். எனது கட்டளையை மீறி நடைபயணம் செல்லும் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தேவையற்றது. எனது வீட்டில் வைக்கப்பட்ட ஒட்டுகேட்புக் கருவி கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்திய அளவில் திறமையான தமிழக சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினால், 2 நாட்களில் கருவியை வைத்தவரைக் கண்டுபிடித்துவிடலாம். இது தொடர்பாக சைபர் க்ரைம் மற்றும் காவல் துறை மூலமாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. தேர்தல் நெருங்குவதால் தமிழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கடி வந்து செல்கிறார். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.