சென்னை: பாமக தலைவர் அன்புமணியின் நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகஸ்ட் 10-ம் தேதி பூம்புகாரில் மகளிர் மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், கட்சி தலைவர் அன்புமணி ‘உரிமை மீட்பு பயணம்’ நடத்தப்போவதாக அறிவித்து, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நேற்று முன்தினம் இந்த நடைபயணத்தை தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டி அன்புமணியின் நடைபயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று டிஜிபிக்கு கடிதம் அனுப்பினார்.
இதை தொடர்ந்து, அன்புமணியின் நடைபயணத்துக்கு டிஜிபி சங்கர் ஜிவால் தடை விதித்துள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இதுதொடர்பான சுற்றறிக்கையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதை மறுத்துள்ள டிஜிபி அலுவலகம், ‘அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை. சுற்றறிக்கை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என நேற்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அன்புமணியின் நடைபயணத்தால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் புகார் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்ட சாராம்சத்தை சுட்டிக்காட்டி, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி.) சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கவும், சட்டம் – ஒழுங்கு பாதிக்காத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், இந்த சுற்றறிக்கையை தவறாக புரிந்துகொண்டு, நடைபயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவலை பரப்பியுள்ளனர். அன்புமணியின் நடைபயணத்துக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை’’ என்றார். இதுகுறித்து பாமக செய்தி தொடர்பாளர் பாலு கூறியதாவது: அன்புமணியின் 100 நாள் பயணத்துக்கு அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் அனுமதி வழங்க பரிந்துரை செய்யுமாறு டிஜிபி அலுவலகத்தில் ஏற்கெனவே கடிதம் கொடுக்கப்பட்டது. டிஜிபி அலுவலகத்தில் இருந்து அதற்கு பதில் கடிதமும் வந்தது. ‘அனுமதி வழங்குவது மாவட்ட எஸ்.பி.யின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. எனவே, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்களிடம் உரிய அனுமதி பெற்றுக் கொள்ளலாம்’ என்று அதில் கூறப்பட்டது.
இதுவரை பாமக தலைவர் அன்புமணியின் 2 நாள் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் துறையினர் அனுமதி வழங்குவார்கள். எனவே, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல் பயணம் தொடரும். பயணம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.