Last Updated : 24 Jun, 2025 08:35 PM
Published : 24 Jun 2025 08:35 PM
Last Updated : 24 Jun 2025 08:35 PM

திண்டுக்கல்: பெற்றோர் இல்லாத குழந்தைகளின் கல்விச் செலவுக்காக மாத நிதி உதவி வழங்கும் ‘அன்புக் கரங்கள் திட்டம்’ மூலம் தமிழகத்தில் 2.82 லட்சம் குழந்தைகள் பயன்பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தைகளின் உடல் நலனைக் காக்கவும், தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கவும், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பயிற்சி முகாம் தொடக்க விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. ஆட்சியர் செ.சரவணன் தலைமை வகித்தார்.
அமைச்சர் கீதா ஜீவன் முகாமைத் தொடங்கிவைத்துப் பேசியது: “பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பெற்றோர் இல்லாத குழந்தைகளின் கல்விச் செலவுக்காக மாத நிதி உதவி வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் செயல்படுத்த உள்ளார். இதில் 2.82 லட்சம் குழந்தைகளுக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 11 ஆயிரம் குழந்தைகளுக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. புதிய செயலி மூலம் குழந்தைகள் எடை, உயரம், தரவுகள் பதிவு செய்யப்படும்.
அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கையை ஏற்க மாட்டோம் எனக் கூறவில்லை. அதை அரசு பரிசீலனை செய்து வருகிறது. எப்போது நிறைவேற்றப்படும் என்பதை நான் சொல்ல முடியாது. காலம் வரும்போது கனியும். மாணவர்கள் பள்ளிகளுக்கு ருத்திராட்சம், திருநீர் உடன் வருவது அவரவர் விருப்பம்” என்று பேசினார்.
‘முருகன் எங்களுடன் இருக்கிறார்’- தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மதுரை முருக பக்தர் மாநாட்டில் பெரியார் குறித்த வீடியோ வெளியிட்டது தவறு. அதிமுக முன்னாள் அமைச்சர்களே இதைக் கண்டித்துள்ளனர். மக்கள் அதை ஏற்கவில்லை. காலம் வரும்போது மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பர். நான் இந்துதான். ஆனால், தமிழன் என்றுதான் சொல்ல வேண்டும். முருகனை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள். ஆனால், முருகன் எங்களுடன் இருக்கிறார். நீங்கள் எப்படி அரசியல் செய்ய முடியும்” என்று கூறினார்.
FOLLOW US
தவறவிடாதீர்!