வண்டலூர்: காவல் துறையில் பெண்கள் என்ற தலைப்பில் 11-வது 2 நாள் தேசிய மாநாடு வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நேற்று தொடங்கியது மாநாட்டை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தொடங்கி வைத்தார். இன்று நடக்கும் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
பெண் காவலர்களை கவுரவிக்கும் வகையில் 11-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நடந்தது. மாநாட்டின் கருப்பொருள் ‘பெண் காவல்துறை மற்றும் அதிகாரமளித்தல்’ என்ற கரும்பொருளுடன் நடைபெற்ற மாநாட்டை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது:- தமிழகத்தில் காவல்துறையில் பெண்களை முதன்முதலாக தமிழ்நாடு அறிமுகப்படுத்தியது. பெண்களை காவல் துறையில் சேர்த்து 50 ஆண்டுகள் கடந்து விட்டது. மாநாட்டில் இருந்து எழும் பரிந்துரைகளுக்கு ஏற்ப அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும்.
காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் காவல்துறை பற்றிய பொதுமக்களின் பார்வையை மாற்றுவதோடு மட்டுமல்லாமல், காவல்துறையின் செயல்பாடுகளும் மேம்படும். பெண் காவலர்களுக்கு அவர்களின் பணியிடத்தில் அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும். காவல் பணியிலும், குடும்பத்திலும் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கு என தனியாக உதவி மையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் (BPR&D) இயக்குநர் ராஜீவ் குமார் ஷர்மா, தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தின் இயக்குநர் டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர், பொருளாதார குற்றப் பிரிவு, கூடுதல் இயக்குநர் பால நாகதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இறுதியில் இணை அமைச்சர் தேசிய மாநாட்டின் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இன்று நிறைவு விழா: தமிழ்நாட்டில் உள்ள சுமார் 140 மகளிர் காவல் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இன்று நடக்கும் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.