சென்னை: விஜய் பிறந்த நாளுக்கு அனுமதி இன்றி விதிகளை மீறி பேனர் வைத்ததாக, தவெக-வினர் மீது போலீஸார் 53 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
தவெக தலைவர் நடிகர் விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. அவரது தொண்டர்களும், ரசிகர்களும் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தவெக-வினர் பேனர்கள் வைத்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.
உரிய அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். அப்போது, சில இடங்களில் போலீஸாருக்கும், தவெக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேபோல், சென்னையிலும் தி.நகர், வடபழனி உள்பட பல்வேறு பகுதிகளில் தவெக சார்பில் பேனர் வைத்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பொது இடங்களில் அனுமதி இன்றி, பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அனுமதி இன்றி, விதிகளை மீறி விஜய் பிறந்தநாள் பேனர் வைத்ததாக கூறி. தவெகவினர் மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.