திருச்செந்தூர் நவம்பரில் 1980 சுப்பிரமணிய சுவாமி கோயில் அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்து போனார். இதை கொலை என்று சொல்லி, 1982 பிப்ரவரியில் மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நெடும்பயணம் போனார் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி. நடைபயணத்தில் அவரது காலில் கொப்புளங்கள் ஏற்பட்டதாகக் கேள்விப்பட்ட அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர், கருணாநிதியை போனில் அழைத்து நலம் விசாரித்தார்.
அத்தோடில்லாமல் தனது நண்பருக்கு உதவியாக இருக்கட்டுமே என்பதற்காக அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஒன்றையும் மருத்துவக் குழுவினர் சகிதம் அனுப்பிவைத்தார். திமுக-வால் இதை வரவேற்கவும் முடியவில்லை; வசைபாடவும் முடியவில்லை. 43 வருடங்கள் கழித்து வரலாறு வேறு மாதிரியாக திரும்பி இருக்கிறது. இப்போது, தனது பிரச்சாரக் கூட்டங்களுக்குள் ஆளும்கட்சி வேண்டுமென்றே ஆம்புலன்ஸை விட்டு ஆட்டையைக் கலைப்பதாக ஆவேசப்பட்டிருக்கிறார் இன்றைய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்.
இபிஎஸ்ஸின் ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ பரப்புரை பயணம் கடந்த 19-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அணைக்கட்டு தொகுதியில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்துக்கு நடுவே ஆம்புலன்ஸ் ஒன்று வர, பரப்புரை பயணத்தில் தான் பேசிக்கொண்டிருக்கும் போது இப்படி இதுவரை 30 முறை ஆம்புலன்ஸ் குறுக்கிட்டிருப்பதாகச் சொல்லி கொதித்தெழுந்த இபிஎஸ், “இது திமுக அரசின் கேவலமான செயல். இனிமேல் இப்படி எனது கூட்டத்திற்கு நடுவே ஆம்புலன்ஸ் வந்தால் அதை ஓட்டி வரும் டிரைவரே பேஷன்டாக அதில் செல்ல வேண்டிய நிலைமை வரும்” என எச்சரித்தார்.
இந்த நிலையில், வயிற்றுப் போக்கால் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த மூதாட்டி சந்திராவை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காகவே ஓட்டுநர் சுரேந்தர் ஆம்புலன்ஸில் அந்த வழியாக வந்ததாக ‘108’ ஆம்புலன்ஸ் நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எங்காவது விபத்து ஏற்பட்டால் 8 முதல் 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் அங்கு சென்று உயிர்களைக் காக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வரும் வழியில் இவர் கூட்டத்தை கூட்டிவிட்டு, தான் வரும் வழியில் ஆம்புலன்ஸை விடுவதாகச் சொல்கிறார். மருத்துவப் பணியாளரை ஒரு முன்னாள் முதல்வர், மிரட்டுவது போல் பேசுவது அநாகரிகம். அவர் இத்துடன் இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால், இதுகுறித்து நம்மோடு பேசிய அதிமுக-வின் செய்தித் தொடர்புச் செயலாளரான வைகைச்செல்வனோ, “நிச்சயம் இது திமுக-வினர் வேலை தான். எங்கு பார்த்தாலும் எடப்பாடியார் பேசிக்கொண்டிருக்கும்போது சரியாக ஒரு ஆம்புலன்ஸ் அந்த வழியாக வருகிறது. கொடியோடு வா என்றால் தடியோடு வருவது திமுக-வினரின் வழக்கம்.
அப்படித்தான் எடப்பாடியாரின் கூட்டத்துக்கு திரளும் பொதுமக்களின் எழுச்சியைக் கண்டு மிரண்டு போய், எடப்பாடியார் கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸை உள்ளே விடுகிறார்கள். அவர் பேசிக்கொண்டிருக்கையில் அந்த வழியே ஆம்புலன்ஸ் வருவதால் பேச்சு தடைபடுகிறது. அவரது கவனமும், பொதுமக்களின் கவனமும் சிதைகிறது. கூட்டத்தின் ஒழுங்கு கலைகிறது. இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் திமுக இப்படி செய்கிறது” என்றார்.
திமுக செய்தித் தொடர்புச் செயலாளரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரனோ, “எங்காவது மைதானத்தில் இப்படிப்பட்ட கூட்டம் நடந்து, அந்த வழியாக ஆம்புலன்ஸ் வந்தால் திட்டமிட்டு செய்வதாகச் சொல்லலாம். நகரின் பிரதான சாலைகளில் ஆம்புலன்ஸோ மற்ற வாகனங்களோ செல்லக்கூடிய வழியில் வாகனத்தை நிறுத்திக்கொண்டு பேசும்போது ஆம்புலன்ஸ் வருவது தவிர்க்க முடியாதது.
முதல்வர், துணை முதல்வரின் கூட்டங்களிலும் கூட இப்படி ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. அப்போதெல்லாம் உடனடியாக அதற்கு இடம் கொடுத்து, விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறார்கள். இப்படி உயிர் காக்கும் அவசரத்துக்காகச் செல்லும் ஆம்புலன்ஸை குறை சொல்வது ஒரு நல்ல தலைவருக்கு அழகில்லை” என்றார்.