சென்னை: காதலித்த இளைஞருடன் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோ இணையதளத்தில் வெளியான விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரிடம் 7 ஆண் போலீஸார் சுற்றி அமர்ந்து கொண்டு அதே வீடியோவைக் காண்பித்து துருவித் துருவி விசாரணை நடத்தியதும், பெண்ணின் பெயரை எப்ஐஆரில் அடையாளப்படுத்தியதும் கொடுமையின் உச்சம் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற பாலியல் ரீதியிலான விசாரணையின்போது பெண் போலீஸ் அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் என டிஜிபிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரி பருவக் காதலனுடன் நெருக்கமாக இருந்தபோது ரகசியமாக எடுக்கப்பட்ட அந்தரங்க வீடியோக்கள் தற்போது திட்டமிட்டு 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆகவே அந்த வீடியோக்களை இணையதளங்களில் இருந்து அகற்றக் கோரி பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரகுரு, இந்த வழக்கில் மனுதாரர் தொடர்புடைய வீடியோக்களை பரப்பியதாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், மனுதாரரின் ஆபாச வீடியோக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், இன்னும் 39 இணையதளங்களில் அந்த வீடியோக்கள் அகற்றப்படவில்லை என்றும் மீண்டும் பரப்பப்பட்டு வருவதாகவும் அதை தடுக்க வேண்டும் என்றும் கோரினார். மேலும், ஏற்கெனவே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டு புகார் அளிக்கச் சென்ற மனுதாரரிடம் விசாரணை என்ற பெயரில் ஆண் போலீஸார் அத்துமீறி கேள்விகளை கேட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து நீதிபதி, “பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை என்ற பெயரில் ஆண் போலீஸார் கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்வது அருவருக்கத்தக்கது. இது ஏற்கெனவே உடல்ரீதியாக நடந்த பாதிப்பைவிட மனரீதியிலான கூடுதல் பாதிப்பைத்தான் அந்த பெண்ணுக்கு தரும்.
இந்த வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரிடம் 7 ஆண் போலீஸார் சுற்றி அமர்ந்து கொண்டு அதே வீடியோவைக் காண்பித்து துருவித் துருவி விசாரணை நடத்தியதும், அந்தப் பெண்ணின் பெயரை வெளிப்படையாக சட்டவிரோதமாக எப்ஐஆரில் குறிப்பிட்டு இருப்பதும் கொடுமையின் உச்சம். ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த பெண் போலீஸ் அதிகாரிகளே இல்லையா?” என கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், “உடனடியாக அந்தப் பெண்ணின் பெயரை வழக்கு ஆவணங்களில் இருந்து நீக்க வேண்டும். மனுதாரர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் எந்த இணையதளங்களிலும் பரவாமல் உடனடியாக அவற்றை தடுத்து அகற்ற நடவடிக்கை வேண்டும். அதேபோல இதுபோன்ற விவகாரங்களில் இணையதளங்களில் பகிரப்படும் அந்தரங்க வீடியோக்களை அகற்ற எங்கு புகார் அளிக்க வேண்டும். புகார் அளித்தால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்ற பாலியல் ரீதியிலான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்த பெண் போலீஸ் அதிகாரிகளை நியமிக்க டிஜிபி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரான அசன்முகமது ஜின்னாவை நீதிமன்றத்துக்கு உதவும் நபராக நியமித்து விசாரணையை ஜூலை 22-க்கு தள்ளி வைத்துள்ளார்.