சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அத்திப்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை 2 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இந்த பாதை வழியாக மின்சார, விரைவு, சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவு, சரக்கு ரயில்கள் செல்லும் போதெல்லாம், மின்சார ரயில்கள் ஆங்காங்கே ஓரமாக நிறுத்தப்படுகின்றன. இதனால் இத்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள் தினமும் 45 நிமிடங்கள் வரையில் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே இத்தடத்தில் கூடுதலாக ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, அத்திப்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே 3,4வது பாதை அமைக்க தெற்கு ரயில்வே தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், ரூ.365.42 கோடி மதிப்பிலான 3, 4-வது பாதை பணிக்கான பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை புறநகரில் மற்ற வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் இருப்பதுபோல, கும்மிடிப்பூண்டி தடத்தில் கூடுதல் பாதை இல்லை. சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அத்திப்பட்டு வரையில் மொத்தம் 4 பாதைகள் உள்ளன. ஆனால், அத்திப்பட்டிலிருந்து 2 பாதைகள் மட்டுமே இருப்பதால் வெளி மாநிலங்களிலிருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் சில நேரங்களில் தாமதமடைகின்றன.
பயணிகள் நெரிசல், சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளதால், அத்திப்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை 3, 4-வது புதிய பாதை ரூ.365.42 கோடியில் அமைக்க ரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது, இந்த புதிய பாதைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பாதைகள் பயன்பாட்டுக்கு வரும்போது, இத்தடத்தில் விரைவு மற்றும் மின்சார ரயில்களின் தாமதம் குறையும். இது தவிர, ரயில்களின் சேவைகளும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.