சென்னை: அதிமுக பொறுப்புகளில் இருந்து தான் நீக்கப்பட்டது ‘மகிழ்ச்சியே’ என முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், செப்.5-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம்திறந்து பேச உள்ளதாக கூறியிருந்தார். அதன்படி, ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சி உடைந்து விடக்கூடாது என்பதற்காக, அனைவரும் இணைந்து, அன்றைய பொதுச் செயலாளராக சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். அதற்குப் பிறகு, யார் முதல்வர் என்ற நிலை வந்தபோது, முதல்வராக பழனிசாமியை சசிகலா முன்மொழிந்தார்.
அந்த நேரத்தில் எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. அதிமுக உடைந்து விட கூடாது என்ற நோக்கத்தில், அதை மறுத்து விட்டேன். அதிமுகவுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, நடந்த பல தேர்தல்களில் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. 2024 மக்களவை தேர்தலின்போது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தால், 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும்.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிந்த பிறகு, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம் இவர்களோடு நானும், கட்சியின் பொதுச் செயலாளரான பழனிசாமியை சந்தித்தோம். அப்போது, ‘‘கட்சி தொய்வடைந்துள்ளது. தேர்தல் களத்தில் நாம் எவ்வளவு வியூகம் வகுத்தாலும், வெற்றி பெற இயலவில்லை. எனவே, கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தோம். ஆனால், எங்கள் கருத்துகளை ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை.
நம்மைவிட்டு வெளியே சென்றவர்களை, ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற எண்ணத்துடன் அரவணைத்தால்தான் தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். இது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கற்றுத் தந்த பாடம். தவிர, அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்துவிட்டு, வெளியே சென்றவர்கள், தற்போது எந்த நிபந்தனையும் இல்லாமல், இணையத் தயாராக உள்ளனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கு, வெளியே சென்றவர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். யார் யாரை இணைக்க வேண்டும் என் பதை பொதுச் செயலாளர் முடிவு செய்யலாம். மேலும், இதற்கான முயற்சியை 10 நாளில் எடுக்க வேண்டும். கட்சித் தலைமை இதை செய்யாவிட்டால், இந்த மனநிலையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து, அதற்கான பணிகளை மேற்கொள்வோம். இந்த கோரிக்கைக்கு முடிவு வந்தால்தான், பழனிசாமியின் பிரச்சார பயணத்தில் பங்கேற்பேன்” என தெரிவித்திருந்தார்.
கே.ஏ. செங்கோட்டையனின் இந்த செய்தியாளர் சந்திப்பு தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (சனிக்கிழமை) காலை ஆலோசனை நடத்தினார். இதில், மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, கே.ஏ செங்கோட்டையனை கட்சியின் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பது தொடர்பான அறிக்கையை அதிமுக வெளியிட்டது. எடப்பாடி பழனிச்சாமி பெயரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ, இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கே.ஏ. செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 7 பேர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ள பழனிசாமி, அவர்களின் கட்சிப் பொறுப்புகளை பறித்துள்ளார். அதன்படி, நம்பியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தம்பி என்கிற கே.ஏ. சுப்ரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் எம். ஈஸ்வரமூர்த்தி என்கிற சென்னை மணி, கோபிச்செட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் என்.டி. குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் எம். தேவராஜ், அத்தாணி பேரூராட்சிக் கழக செயலாளர் எஸ்.எஸ். ரமேஷ், துணைச் செயலாளர் வேலு எனும் மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் கே.எஸ். மோகன் குமார் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை குறித்து செய்தி தொலைக்காட்சி ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கே.ஏ. செங்கோட்டையன், “தருமம் தழைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துக்களை வெளிப்படுத்தினேன். பொறுப்புகளில் இருந்து நீக்கியதற்கு எனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு, “கட்சியின் நலன் கருதி கருத்து சொல்கிறோம். கேட்கவில்லை. எனவே, மகிழ்ச்சியோடு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்” என தெரிவித்துள்ளார்.