சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை வரவுள்ள நிலையில், அதிமுகவில் பூத் கமிட்டி அமைத்ததில் ‘பொய் கணக்கு’ காட்டியுள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதையடுத்து, பூத் கமிட்டி அமைப்பதில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக ஒவ்வொரு பூத்துக்கும் 9 உறுப்பினர்களை கொண்ட கமிட்டியை அமைக்க அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார்.
இதில் 6 ஆண்கள், 3 பெண்கள் இருக்க வேண்டும். கிளைச் செயலாளர்கள் இடம் பெறக்கூடாது. 45 வயதுக்கு கீழே இருக்க வேண்டும். அந்தந்த வாக்குச்சாவடி மையத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருக்க கூடாது உள்ளிட்ட வழிகாட்டுதல்களையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென தலைமை அறிவுறுத்தி இருந்தது.
இப்பணியை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலைமை கழகத்தில் இருந்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். மேலும் இப்பணியை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல மாவட்டங்களில் பூத் கமிட்டி அமைப்பதில் தொய்வு ஏற்பட்டதால், மாவட்டச் செயலாளர்களையும், அதன் பொறுப்பாளர்களையும் எச்சரித்த கட்சித் தலைமை, ஜூன் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், சில இடங்களில் பூத் கமிட்டி முறையாக அமைக்காமல் பொய்யான தகவலை கட்சி தலைமைக்கு மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து பூத் கமிட்டி முறையாக அமைக்கப்பட்டதா? அதன் செயல்பாடுகள் என்ன என்பதை ‘டிடெக்டிவ்’ ஏஜென்ஸி மூலம் கட்சி தலைமை கண்காணிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவர் 29-ம் தேதி (நாளையும்), ஜூலை 30-ம் தேதியும் (நாளை மறுநாள்) என்று இரண்டு நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்நிலையில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் சிவகங்கை மாவட்ட அதிமுக உண்மைத் தொண்டர்கள் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், சிவகங்கை மாவட்டத்தில் 30 சதவீதம் கூட பூத் கமிட்டி பணியை முடிக்கவில்லை. ஆனால் மாற்று கட்சியில் இருப்போர், கட்சிக்கு சம்பந்த மே இல்லாதவர்களை சேர்த்து பூத் கமிட்டி அமைத்துவிட்டதாக பொய் கணக்கு காட்டியுள்ளனர். இதற்கு காரணமான மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், பூத் கமிட்டி பொறுப்பாளரான அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு மூத்த நேர்மையான தலைமை கழக நிர்வாகியை பொறுப்பாளராக நியமித்து பூத் கமிட்டியை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று சுவரொட்டிகளில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, பல இடங்களில் பூத் கமிட்டி அமைத்ததில் பொய் கணக்கு காட்டியாக புகார் எழுந்த நிலையில், கட்சி தலைமை டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்திலும் பூத் கமிட்டி முறையாக அமைக்கவில்லை என்ற பிரச்சினை எழுந்திருப்ப து கட்சி தலைமைக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.