சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். பழனிசாமி பிரச்சாரத்தின்போது வரும் கூட்டம், நிச்சயம் வாக்கு களாக மாறும் என்று அவர்தெரிவித்தார்.
சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பாஜக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர், நெடுஞ்சாலை நகரில் உள்ள பழனிசாமி வீட்டுக்குச் சென்று, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் 75 இடங்களில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி, சேலத்தில் நடந்த மாரத்தான் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தோம். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம்.
இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை. மக்கள் நலனை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும்போது, பெரிய மாற்றங்கள் ஏற்படும். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி செல்லும் இடங்களில் எல்லாம் பெரிய எழுச்சியை பார்க்க முடிகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோர் என்டிஏ கூட்டணியில் இணைவார்களா என்பது குறித்து, அவர்களிடம்தான் கேட்க வேண்டும். வரும் தேர்தலில் திமுக, தவெக-வுக்கு இடையில்தான் போட்டி என்று விஜய் சொல்வதை ஏற்க முடியாது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி 4 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி வாங்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அவருக்கு வரும் கூட்டம் நிச்சயம் வாக்குகளாக மாறும்.
பாஜகவுடன் எந்த கட்சியையும்: ஒப்பிட முடியாது. வரும் அக்.11-ம் தேதி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறேன். அதில் பங்கேற்குமாறு கூட்டணித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதிமுக, பாமக உள்ளிட்ட எந்த கட்சியின் உள் விவகாரங்களிலும் பாஜக ஒருபோதும் தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார்.