திருநெல்வேலி: அதிமுக, பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு பாஜகதான் முக்கிய காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வாக்கு என்பது ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை உரிமை. அந்த வாக்கு அதிகாரத்தை தேர்தல் ஆணையமும், பாஜகவும் சேர்ந்து பறித்து வருகின்றன. இதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் நெல்லையில் செப். 7-ல் (இன்று) விழிப்புணர்வு மாநாடு நடத்துகிறோம். இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய்குமார், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி என்பது ஒரு மூழ்கும் கப்பல். மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. மக்கள் எதிர்ப்பை உணர்ந்ததால்தான் டிடிவி.தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். பாஜக எங்கு இருக்கிறதோ, அங்கு சர்வ நாசம்தான் ஏற்படும். மகாராஷ்டிராவில் சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்ததுபோல தமிழகத்தில் அதிமுக 4 அணிகளாக சிதறிக் கிடப்பதற்கும், பாமகவில் பிரச்சினை நீடிப்பதற்கும் பாஜகவே காரணம். யார் ஒன்று சேர்ந்தாலும் இண்டியா கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது. கிராமம் நோக்கி காங்கிரஸ் என்ற திட்டத்தின்கீழ் 80 சதவீதம் கிராமங்களில் கமிட்டிகளை அமைத்து, உறுப்பினர்களுக்கு க்யூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்கியுள்ளோம். விரைவில் கிராமக் கமிட்டிப் பொறுப்பாளர்கள் 2 லட்சம் பேரை அழைத்து, ராகுல் காந்தி தலைமையில் பிரம்மாண்ட மாநாடு நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராபர்ட் புரூஸ் எம்.பி. ரூபி மனோகரன் எம்எல்ஏ, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.