மதுரை: அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று மதுரை வந்தடைந்தார். பின்னர் அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக என்றைக்குமே மறைந்த தியாகிகள், பெரியவர்களை வணங்கியும், போற்றியும் வந்துள்ளது. அந்த வகையில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்த செல்கிறோம்.
அதிமுக வலுவாக தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரவாரத்துடன் பங்கேற்கிறார்கள், ஆதரவு கொடுக்கிறார்கள். திமுகவினர் பொறாமையில் உள்ளனர். அதிமுகவில் பிளவு வர வேண்டும் என நினைக்கின்றனர். அவர்கள் எண்ணத்தை சொல்கிறார்கள். அதிமுகவை பாஜக உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் தானே இன்றைக்கு பழனிசாமியை தலைவராக ஏற்று இருக்கிறோம்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க துணிச்சல் தேவை இல்லை. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் உள்துறை அமைச்சரை சந்தித்ததாக சொல்லி இருக்கிறார். எனக்கு அதுபற்றி முழுமையான விவரம் தெரியாது.
பாஜக ஐசியூவில் உள்ளதாக உதயநிதி சொல்லி இருக்கிறார். 2026-க்கு பிறகு யார் ஐசியூவுக்கு செல்வார் என தெரியும். பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக்கூடாது என டிடிவி தினகரன் கூறியிருப்பது அவர் சொந்த கருத்து. ஓபிஎஸ்ஸை எந்த நேரமும் அழைத்துப் பேசுவேன். எனக்கு யார் மீதும் கருத்து வேறுபாடு கிடையாது. அண்ணன் ஓபிஎஸ்ஸிடம் கண்டிப்பாக பேசுவேன். பேசிவிட்டு சொல்கிறேன்.
அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததால் எங்கள் கூட்டணிக்குள் எந்த வித இடர்பாடும் இல்லை. உள்துறை அமைச்சர் இங்கு வந்து சந்தித்தால் தான் அப்படி பேச வேண்டும். இவர் டெல்லி போய் சந்தித்திருக்கிறார்.
பள்ளிக்கு விடுமுறை விட்டு உங்களுடன் முதல்வர் முகாம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. பொதுவாக கல்வி அறிவு கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இவர்கள் பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட்டு விழா எடுத்திருக்கிறார்கள். விளம்பரமும் செய்து இருக்கிறார்கள். அதனால் தான் இந்த ஆட்சி வேண்டாம் என்று நினைக்கிறோம்.
திமுக வலுவாக இருக்கிறது என உதயநிதி சொல்வதாக தான் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை. அவராகவே திமுக வலுவாக இருப்பதாக சொல்லவில்லை. விஜய் சனிக்கிழமை பிரச்சாரம் செய்வதாக பயணத்திட்டம் வெளியாகியுள்ளது. சனிக்கிழமையின் மகிமை எல்லோருக்கும் தெரியும். அதன் பிறகு நான் எதுவும் சொல்ல வேண்டாம்.
நான் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மற்றும் நட்டா என் மீது அளவற்ற அன்பும், பாசம் வைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.
அதிமுக, பாஜக கூட்டணியில் பிளவு இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்கும். பிளவு என்பது கிடையாது.
மீண்டும் கூட்டணியில் சேர பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக்கூடாது என டிடிவி நிபத்தனை விதித்திருப்பது குறித்து இப்போது பேச வேண்டியதில்லை. கூட்டணியை யாரும் பிளவு படுத்த நினைக்க வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.