கோவை: “அதிமுக என்ற மாபெரும் கட்சி தனி நபரை சார்ந்து இல்லை” என ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.செல்வராஜ் தெரிவித்தார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவினர் புதிய மாவட்ட செயலாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என கட்சி பொதுச் செயலாளருக்கு கெடு விதித்த, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனி ன் அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன.
கோவை மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் ஏ.கே.செல்வராஜ் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள், மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் ஏ.கே.செல்வராஜை சந்தித்து வாழ்த்தி, தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட கோபி, பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுகவின் நகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் இன்று மேட்டுப்பாளையத்தில் வைத்து ஏ.கே. செல்வராஜை சந்தித்து சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அவர்களுடன், செங்கோட்டையனின் ஆதரவாளர் என அறியப்படும், பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பண்ணாரியும் இன்று புதிய மாவட்ட செயலாளரான ஏ.கே.செல்வராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரமணிதரன், சரஸ்வதி, முன்னாள் எம்.பி காளியப்பன் உள்ளிட்ட ஈரோட்டின் முக்கிய நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.
பின்னர், பண்ணாரி எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாங்கள் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பக்கம் துணை நிற்போம்” என்றார்.
அதன் பின்னர், அங்கு திரண்டிருந்த ஈரோடு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ் பேசும்போது,“அதிமுக என்னும் மாபெரும் கட்சி தனி நபரை சார்ந்து இல்லை. இயக்கம் தான் பெரிது, தனி நபர் அல்ல என இங்கு வந்துள்ள இயக்க நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியின் உத்தரவிற்கு இணங்க வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற ஒருங்கிணைந்து இயங்குவோம்” என்றார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஏராளமான வாகனங்கள் மூலம் சாரை சாரையாக மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜை சந்திக்க வந்ததால், அப்பகுதியில் வாகன நெருக்கடி ஏற்பட்டது.