ராமநாதபுரம்: “அதிமுக ஆட்சியில் மதச்சண்டை, சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ராமநாதபுரத்தில் இன்று பொதுமக்களிடையே பேசியது: “திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் ஆகியும் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. 525 அறிவிப்புகளில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளனர்.
எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பத்திரப்பதிவில் அதிகளவு லஞ்சம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்பு. டாஸ்மாக் ஊழல், யார் அதற்கு மந்திரியாக இருந்தது என்றால், 10 ரூபாய் பாலாஜி. அவர்தான் புதிய டெக்னிக் கண்டுபிடித்தார். பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல். ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் வருமானம் மேலிடத்துக்குப் போகிறது. வருடத்துக்கு 5,400 கோடி ரூபாய் கொள்ளையடிக்கும் கட்சி தேவையா? திமுக ஆட்சியில் எந்த துறையும் சரியாக செயல்படவில்லை, டாஸ்மாக் மட்டும்தான் செயல்படுகிறது.
அதிமுக ஆட்சியில் ராமநாதபுரத்தில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு 49 கோடி நிதி ஒதுக்கி திட்ட அறிக்கை தயாரித்தோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை கிடப்பில் போட்டுவிட்டு ரூ.17 கோடியில் கட்டி, கடைகளை எல்லாம் திமுகவினரே எடுத்துக் கொண்டனர். நகராட்சியில் வீடு, கடை கட்டினால் 1,000 சதுரடிக்கு 37 ஆயிரம் ரூபாய், திமுக ஆட்சியில் 74 ஆயிரம் ரூபாயாக 100% உயர்த்தி விட்டனர்.
இது இஸ்லாமிய மக்கள் நிறைந்த பகுதி. திமுக கூட்டணிதான் சிறுபான்மை பாதுகாப்பு என்று மாயத்தோற்றம் காட்டுகின்றனர். உண்மையிலேயே பாதுகாப்பு கொடுத்தது அதிமுகதான். அதிமுக ஆட்சியில் மதச்சண்டை, சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக சாதி, மதம் இல்லாத கட்சி. ஆண், பெண் இரண்டே சாதிகள்தான்.
அதிமுக ஆட்சியில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி கொடுத்தோம். ஹஜ் மானியம் 12 கோடி கொடுத்தோம். ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி, ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு, உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம், வக்ஃப் வாரிய ஆண்டு நிர்வாக மானியம், பள்ளி தர்காக்களுக்கு புனரமைப்பு நிதி எல்லாம் கொடுத்தோம். இந்த மண்ணின் மைந்தர் அப்துல் கலாமை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற வைத்தோம். ஆனால் திமுக எதிர்த்து ஓட்டுப் போட்டனர். எனவே தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.