திண்டுக்கல்: “அதிமுகவின் கொள்கைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார். 2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்” என மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஜூலை 6-ம் தேதி மதுரையில், உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மை முஸ்லிம்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் தர வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டுள்ள வகுப்பு திருத்தச் சட்டம் 2025 திரும்பப் பெற வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் பேரணியும், மாநாடும் நடத்த உள்ளோம்.
நீதியரசர் ராஜேந்தர் சச்சார் குழு அறிக்கையில் சமூக பொருளாதார கல்வி நிலையில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கி இருக்கின்றார்கள். அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அளவுக்கு பல்வேறு மக்கள் பிரதிநிதித்துவ சபைகளில் இடம் கிடைப்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2024-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 24 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். 5 விழுக்காடு முஸ்லிம்கள் இந்த நாட்டிலே வாழ்கிறார்கள். அந்த வகையில், 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் 180 இடங்களாவது இருந்திருக்க வேண்டும். ஆனால் 5 சதவீதத்தை கடந்ததில்லை, என்பது தான் யதார்த்தமான நிலையாக இருக்கின்றது.
இந்தியா முழுவதும் 4,123 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒட்டுமொத்தமாக நாட்டிலேயே 296 முஸ்லிம் எம்எல்ஏ-க்கள் மட்டும் உள்ளனர். பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் புல்டோசர்களை வைத்து மசூதிகள் இடிக்கப் படுகின்றன. வக்பு திருத்த சட்டம் 2025 என்பது ஒரு வகையான புல்டோசர் தான். கல்வி நிலையங்கள் அபகரிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் முஸ்லிம்களுடைய ஜனத்தொகை 7 சதவீதம். 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 14 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். நாங்கள் எங்களுக்காக வேண்டி மட்டும் கேட்கவில்லை. அனைத்து கட்சிகளிலும் திமுக, காங்கிரஸ் அல்லது எதிரணி அதிமுக இருந்தாலும் சரி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் பொழுது முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை கவனத்தில் கொண்டு உரிய இடங்கள் ஒதுக்க வேண்டும் என்பது கோரிக்கை.
தமிழ்நாட்டில் மக்களின் செல்வாக்கைப் பெற்ற கட்சியாக மனித நேய மக்கள் கட்சி உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது. முஸ்லிம் கட்சிகளில் மிகப்பெரிய கட்சிகள் செல்வாக்கு மிக்க கட்சிகள் என யாரையும் குறிப்பிட முடியாது.
முருகன் மாநாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை பற்றி அண்ணாமலை பேசியது உண்மைக்கு புறம்பானது. நான் அதில் ஆழமாக போக விரும்பவில்லை. அண்ணாமலை சொன்ன புள்ளி விவரம் மிகவும் தவறானது. முஸ்லிம்களுடைய மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று பாஜக அரசின் திட்டம் அதன் ஒரு பகுதியாக அண்ணாமலை பேச்சு முருக பக்தர் மாநாட்டில் அமைந்துள்ளது.
பல்வேறு மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது.
இந்த ஆட்சி எந்த வகையிலும் குறை வைக்கவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. பேரறிஞர் அண்ணா, அதே போல் தந்தை பெரியார் மூலமாக தமிழ்நாடு இன்று சமூக நீதியில் தலை தூக்கி உள்ளது.
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்கள் எல்லாம் பல்வேறு வகையில் அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். அதற்கு காரணம் தந்தை பெரியார் திறந்து வைத்த வழி. அந்த வழியில் நடந்த அண்ணாவின் பங்களிப்பு. எல்லா வரலாற்றையும் மாற்றுவதற்கு தான் பாஜக விரும்புகிறார்கள். தமிழ் மண்ணில் திராவிடக் கட்சிகள் செய்த மிகப்பெரிய பங்களிப்பை அவர்கள் இருட்டடிப்பு செய்வதற்காக இது போன்ற கருத்துக்களை கூறுகின்றனர். இது மிகவும் வேதனையானது.
எதிர்ப்புகள் பல இடங்களில் இருந்து வந்த பின்பு தான் எடப்பாடி பழனிசாமி வாய் திறந்தார். இது, தனது கட்சிகளின் கொள்கைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து உள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டு. வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக அதிமுக வாக்களித்து இருந்தால் இந்த சட்டம் இயற்றப்பட்டு இருக்காது. பாஜகவுற்கு அடிமை சாசனத்தை அதிமுக எழுதிக் கொடுத்துள்ளது. இந்த நிகழ்வுகளை தான் நாம் பார்த்து வருகிறோம்.
2026 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றியடையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 2021 தேர்தலில் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றோம். திமுக எங்களுக்கும் அதிகமான இடம் கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். அதிகமாக இடம் கேட்போம்.” என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.