கோவை: “எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேரத்லில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்” என கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று (ஜூலை 7) தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இன்று (ஜூலை 8) இரண்டாவது நாளாக கோவையில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இன்று மாலை வடவள்ளி பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பேசியது: “கடந்த அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என ஸ்டாலின் சொல்கிறார். அவர் கண்ணை திறந்து பார்த்தால்தான் தெரியும். அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது திமுக அரசு.
தேய்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா, இல்லையா என்ற நிலை உள்ளது. அதன் செயலாளர் முத்தரசன், ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து அடிக்கடி குரல் கொடுக்கிறார். தமிழகத்தை மீட்போம் என்றால் எப்படி எனக் கேட்கிறார். தேர்தல் மூலமாகத்தான் தமிழகத்தை மீட்போம். மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது. தமிழ்நாடு ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதிலிருந்து மீட்பதுதான் எங்கள் லட்சியம்.
அதிமுக கூட்டணியில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக ஆட்சியில் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கவில்லை என திமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என விசிக திருமாவளவன் கூறுகிறார். நாங்கள் எவ்வளவு ஒற்றுமையாக உள்ளோம் என நீங்கள் வந்து பாருங்கள்.
மத்திய அமைச்சர் அமித் ஷா வந்தபோதே, அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்தக் கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கும். இபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர் என அவரே கூறிவிட்டார். அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். 2026 பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் 210 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது” என்று அவர் பேசினார்.
தொடர்ந்து பி.என்.புதூர், வடகோவை, மரக்கடை சுங்கம், புலியகுளம் உள்ளிட்ட இடங்களில் அவர் பேசினார். சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘ரோடு ஷோ’ மூலமாக மக்களை சந்தித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, செ.தாமோதரன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.