புதுச்சேரி: ‘அதிமுக குடும்ப கட்சி இல்லை, மக்களின் கட்சி. சட்டம் – ஒழுங்கில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாததால் மிக மோசமான நிலைக்கு தமிழகம் சென்றுவிட்டது’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கடலூர் வடக்கு மாவட்ட தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர், விவசாயிகள், வியாபாரிகள், பொதுநல சங்க உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது: “தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் வறட்சி, புயல், கரோனா ஏற்பட்டது. அப்போது இருக்கும் நிதியில் சிறப்பாக மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினோம்.
திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதமாகிறது. அவர்கள் எந்த இயற்கை இடர்பாடையும் சந்திக்கவில்லை. ஒரே ஒருமுறை மழை, வெள்ளம் வந்தது. தமிழக அரசுக்கு பெரிய பேரிடர் நெருக்கடி ஏற்படவில்லை. இந்த ஆட்சியில் வியாபாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூரில் அதிமுக ஆட்சியில் நவீன பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அரசாணையும் வெளியிடப்பட்டது. துரதிஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஆனால், திமுக ஆட்சியில் அதை அமைக்காமல் வேறு இடத்தை தேர்வு செய்தனர்.
வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும். இப்போது நீங்கள் படும் கஷ்டத்தை நாங்கள் அறிந்துள்ளோம். கடலூரில் பிரதான தொழில் வேளாண்மை. வேளாண் தொழில் சிறப்பாக இருந்தால் மற்ற தொழில்களும் சிறப்பான வளர்ச்சி பெறும். அடிக்கடி புயல், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியும் கடலூர் தான்.
அதிமுக குடும்ப கட்சி இல்லை, மக்களின் கட்சி. அதிமுக அரசு இருக்கின்றவரை மக்களின் அரசாகத்தான் நாங்கள் பார்த்தோம். கரோனா காலத்தில் அரசுக்கு ரூ.1 கூட வருவாய் இல்லாத சமயத்தில் மக்களுக்கு தேவையான செலவினை அரசு பணத்தில் இருந்து செய்தோம். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சரியாக இருந்தது. 50 மாத திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதை, மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாநிலம் வளர்ச்சி பெற சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.
சட்டம் – ஒழுங்கில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாததால் மிக மோசமான நிலைக்கு தமிழகம் சென்றுவிட்டது. அதை நாங்கள் சரிசெய்வோம். நல்ல ஆட்சியை தர வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். எல்லோரும் திருப்தி அடைய வேண்டும். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும். திமுக மக்களுக்கான அரசு இல்லை, அவர்களுக்கான அரசு. அவர்களின் சுயலாபத்துக்காக ஒட்டுமொத்த மக்களின் நலனும் பாதிக்கப்படுகிறது.
வேளாண்மைக்கு நீர் முக்கியம். அதை சரியான முறையில் பாதுகாத்து சேமித்து வேளாண் மக்களுக்கு வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் ஒரு சொட்டு நீர் கூட வீணாகக் கூடாது என குடிமராமத்து திட்டம் செயல்படுத்தினோம். பல தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டோம். ஆனால், ஆட்சி மாற்றத்தால் செய்ய முடியவில்லை. நான் முதல்வராக இருந்தபோது கோதாவரி – காவிரி இணைப்பை நடைமுறைப்படுத்த பிரதமரிடம் கடிதம் கொடுத்தேன். அதனை அவர் ஏற்று விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால், திமுக எந்த ஒத்துழைப்பும் தரவில்லை.
நடந்தாய்வாழி காவிரி திட்டம் பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம். அதையும் பிரதமர் ஏற்றுக் கொண்டார். ஜனாதிபதி உரையில் பிரதமர் அதை இடம்பெற செய்தார். இத்திட்டத்துக்கு ரூ.13 ஆயிரம் கோடி மத்திய அரசு தருகிறது. முதல்கட்டமாக ரூ.990 கோடி ஒதுக்கியுள்ளனர். நான் கொண்டுவந்த திட்டம் என்பதால், இத்திட்டத்தை பற்றி தமிழக திமுக அரசு பேசுவதில்லை.
பிளாஸ்டிக் பயன்படுத்த அதிமுக ஆட்சியில் தடை கொண்டுவரப்பட்டது. ஆனால் மக்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. மக்கள் ஒத்துழைப்பு கிடைத்தால்தான் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியும். 2026 தேர்தலில் அத்தனை அமைப்பை சேர்ந்தவர்களும் ஒருமித்த கருத்தோடு நல்ல அரசை அமைக்க துணை நிற்க வேண்டும்” என்றார். இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், அப்துல்ரகீம், கடலுார் மாவட்ட தொழிலதிபர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.