சென்னை: “அதிமுக கட்சி விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழக மக்கள் ஏற்படுத்துவார்கள்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக மருத்துவத் துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ரூ.28.75 கோடியில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சுற்றுப் பயணத்தில் மக்களை சந்தித்து வருகிறார். அவர் ஒரு பொது கூட்டத்தில் நடுரோட்டில் நின்று பேசி கொண்டிருக்கும் போது, அங்கு நோயாளிகளை ஏற்றி கொண்டு வந்திருந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழையவிடாமல், அதற்கு என்னவெல்லாம் தடைகள் செய்ய முடியுமோ, அதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவருக்கு நான் தெரிவித்துக் கொள்வது… நீங்கள் இன்றைக்கு ஆம்புலன்ஸ் வண்டிகளை எல்லாம் நிறுத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒன்று புரியவில்லை. உங்களுடைய கட்சியே, இயக்கமே விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழக மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் ஐசியூ-வில் தான் உங்களுடைய இயக்கம் அனுமதிக்கப்படும். உங்களையும் காப்பாற்றுகின்ற பொறுப்பை முதல்வர் செய்வார்” என்று உதயநிதி கூறினார்.