திருநெல்வேலி: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் வ.உ.சி.யின் பிறந்த நாளையொட்டி அவரது மணிமண்டப்பத்திலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செங்கோட்டையன் பேச்சு அதிமுகவின் உட்கட்சி விவகாரம். யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை. அவர்களது சொந்த குரலில்தான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்களது கருத்தை அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் பேசி முடித்துக்கொள்ள வேண்டும்.
அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்ற முடியும். அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையன் எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொல்வது நல்ல விஷயம். அதிமுக இணைப்பு குறித்து பழனிசாமிதான் பேச வேண்டும். தேவைப்பட்டால் நான் அவரோடு பேசுகிறேன். ஆரம்ப காலத்தில் இருந்து அதிமுக இணைய வேண்டும் என சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
இந்தியாவிற்கு மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் பிரதமர் மோடி தந்துள்ளார். ஜிஎஸ்டி அறிவித்த காலகட்டத்தில் 5 ,12 ,18, 28 சதவிகிதம் என்று இருந்த வரி நிர்ணயங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளது. 90 சதவிகிதம் வரிகள் 5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இதில் பொது மக்களுக்கு மிகப்பெரிய லாபம் உள்ளது. வரி குறைப்பு காரணமாக பொருட்களை வாங்கும் திறன் கூடும். மக்களின் வரிச்சுமை குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி என்பது மத்திய அரசு விதிப்பது என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஜிஎஸ்டி என்பது கவுன்சிலில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் உள்ளனர். இந்த கவுன்சில் கூட்டத்தில் முடிவுகளின்படி வரி அறிவிக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி என்பது மத்திய அரசு மட்டும் செய்தது கிடையாது. அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் ஒன்று கூடி எடுத்த முடிவுதான் ஜிஎஸ்டி வரி.
தமிழகத்தில் பல பிரச்சினைகள் இருக்கிறது. வெளிநாட்டுக்கு 5 முறை தமிழக முதலமைச்சர் சென்று விட்டார். இப்போதும் சென்றுள்ளார். அங்கு அதிமமான ஒப்பந்தம் போட்டதாக சொல்கிறார். அது தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டதற்கு மாநில தலைவர் பொய் சொல்கிறார் என தொழில்துறை அமைச்சர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சிறு தொழிற்சாலைகள் மின்சார கட்டணம் உயர்வு போன்ற பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதிலிருந்து மாற்றம் வர வேண்டும். அதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும்.
அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. தேர்தலுக்கு பல மாதங்கள் உள்ளது. கடைசி ஒரு மாதத்தில் கூட அதிகமான மாற்றங்கள் வரும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும. நிச்சயமாக நல்லது நடக்கும். திமுகவை தவிர்த்து அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். அனைவரும் வரவேண்டும் என்று தெரிவித்தார்.