திருச்சி: அதிமுக உள்கட்சி விவகாரங்களால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: செப்.22-ம் தேதி ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் அமலுக்கு வருகிறது. இது வரிவிகித மாற்றம் மட்டுமல்ல, பொருளாதார மாற்றத்தை கொண்டு வரும் திட்டம். இதனால், 2027-ல் பொருளாதாரத்தில் உலகிலேயே 3-வது இடத்துக்கு இந்தியா வரும்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சந்தித்தபோது அவர் நல்ல விஷயங்கள் குறித்து பேசியிருக்கலாம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்திருக்கிறது. பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும். அதிமுக உள்கட்சி விவகாரங்களால் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஸ்திரத்தன்மையில் பாதிப்பு ஏற்படாது.
அதேவேளையில் மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து விட்டால், யார் யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று மக்கள் சிந்திக்க மாட்டார்கள். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள். அதற்கு அதிமுக – பாஜக கூட்டணி தான் சரியான மாற்று என மக்கள் நினைக்கின்றனர்.
திடீரென சினிமாவில் இருந்து வந்த விஜய் ஏதேதோ பேசுகிறார். அவர் என்ன பேசினாலும் தவெக மாற்று சக்தியாக வர முடியாது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறும் விஜய், தவெகவின் கொள்கை என்ன என்று சொல்லியிருக்கிறாரா? அவருடைய பேச்சு அர்த்தமற்ற வெறும் பேச்சு தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.