சென்னை: இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விரைவாக விசாரித்து தீர்வு காணப்படும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்து உள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பான உரிமையியல் வழக்குகளில் தீர்வு காணப்படும் வரை இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விடக்கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மனுதாரர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்து தீர்வு காண வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக பொதுக்குழு உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக பெங்களூரு வா.புகழேந்தி, சூர்யமூர்த்தி, முன்னாள் எம்பி-க்கள் ஓ.பி.ரவீந்திரநாத், கே.சி.பழனிசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பிலும் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் அதிமுக தொடர்பான இந்த விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் காலக்கெடு நிர்ணயம் செய்யக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான புகார் மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என்பதற்கான காலவரம்பை நிர்ணயம் செய்து எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடரபாக இதுவரை 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, எழுத்துப்பூர்வமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இயற்கை நீதியின் அடிப்படையில் புகார் அளித்த மனுதாரர்களுக்கு போதுமான காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும். தொடக்ககட்ட விசாரணை நடத்தி முடித்தபிறகு இந்த பிரச்சினை தொடர்பாக உரிய முடிவெடுக்கப்படும்.
பிஹார் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்துக்கு வேலை பளு அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு, விசாரணை நடத்த கால வரம்பு நிர்ணயிக்க அவசியம் இல்லை. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, புகார் மனுக்கள் மீது விரைவாக விசாரித்து தீர்வு காணப்படும் என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு (ஜூலை 22) தள்ளி வைத்துள்ளனர்.