நாமக்கல்: “தமிழகத்தில் ஒருவேளை அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நம்மில் பாதி பேர் இந்தியில் பேசிக் கொண்டிருப்போம்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் திமுக சார்பு அணி நிர்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியது: “கட்சியைப் பொறுத்தவரை சார்பணிக்கு தனி இடம் உண்டு. கட்சித் தலைவர் அறிவுறுத்தல்படி சார்பணியினரை சந்தித்து வருகிறேன். கட்சியை சார்ந்து சார்பணி இல்லை. சார்பணியை கட்சி சார்ந்திருக்கும் சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். 23 சார்பணி 25 சார்பணியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர்கள் அணியும் திமுகவில் மட்டும் தான் உள்ளது. சார்பணியினர் நினைத்தால் சாதனை படைக்கும் அணியாக மாறலாம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கட்சியின் மாணவரணி தவிர்த்து பேச இயலாது. சார்பணியினர் தனிப்பட்ட முறையில் 200 வாக்குகளை வைத்திருந்தீர்கள் என்றால் உங்களை யாராலும் தவிர்க்க இயலாது.
அரசின் திட்டங்களை தெருமுனைப் பிரச்சாரம் மூலம் மக்களிடம் கொண்டு சேருங்கள். திண்ணைப் பிரச்சாரம் செய்யுங்கள். சமூக வலைதளங்களிலும் அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் சிறப்பாக செயல்படுங்கள். மக்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேளுங்கள். நிர்வாகிகளுக்குள் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கலாம். அதை தவிர்த்து 2026-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். புதிய வாக்காளர்களை கட்சியின் ஆதரவாளர்களாக மாற்றும் வகையில் செயல்படுங்கள்.
அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளனர். அதனால் நம் பணி எளிதாகிவிட்டது என நினைக்கக் கூடாது. திமுக தலைமையிலான ஆட்சிக்கு பல முனைகளில் மத்திய பாஜக அரசு இடையூறு செய்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தியை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். நல்லவேளை திமுக தலைமையிலான அரசு இங்கு உள்ளது. ஒருவேளை அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் நாமெல்லாம் பாதி பேர் இந்தியில் பேசிக் கொண்டிருப்போம். அந்த நிலைமையை எடப்பாடி பழனிசாமி உருவாக்கியிருப்பார். அவரே டெல்லி சென்று புதிய கல்விக் கொள்கையை ஏற்பதாக கையெழுத்து போட்டு கொடுத்திருப்பார். இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் மத்திய அரசு திணிக்க முயற்சிக்கின்றனர்.
தொகுதி மறுவரை செய்தால் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 31 ஆக குறையும். 8 தொகுதிகளை இழக்க நேரிடும். சிறப்பாக செயல்பட்டால் சார்பணிக்கான முக்கியத்துவத்தை தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன்” என்றார். அமைச்சர்கள் மதிவேந்தன், ராஜேந்திரன், நாமக்கல் கிழக்கு, மேற்கு மவட்ட திமுக செயலாளர்கள், சார்பு அணியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.