தென்காசி: அதிமுக ஆட்சி அமைந்ததும் வீட்டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது.
அதிமுக மதம், ஜாதிக்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளோம். அப்துல் கலாம் குடியரசு தலைவராக வர வேண்டும் என்பதற்காக வாக்களித்தோம். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு வாக்களித்தது திமுக.
இதேபோல, கிறிஸ்தவர்களுக்கும் ஏராளமான நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். சிறுபான்மை மக்களுக்கு அரணாகத் திகழ்வது அதிமுக. அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியில் 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 5 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்தோம். ஆனால், 4 ஆண்டு திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாவது கொண்டுவர முடிந்ததா?
தமிழகம் முழுவதும் தென்காசி உட்பட 6 மாவட்டங்களை புதிதாக உருவாக்கினோம். திமுக ஆட்சியில் ஒரு மாவட்டமாவது உருவாக்கப்பட்டதா? தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், வீட்டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனையுடன் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
இதைத் தொடர்ந்து புளியங்குடி, சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்தார். முன்னதாக, நேற்று காலையில் குற்றாலத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பழனிசாமி வழங்கினார். விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.