தூத்துக்குடி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு, போதைப் பொருள் நடமாட்டத்துக்கு முடிவு கட்டப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் தொழில்முனைவோர், விவசாயிகள், உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி அகில இந்திய தொழில் வர்த்தக சங்கம், இந்திய தொழில் வர்த்தக சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், நாட்டுப்படகு மீனவர் சங்கம், சிறு வணிகர் சங்கம், குரூஸ் பர்னாந்து மக்கள் மன்றம், வழக்கறிஞர்கள் சங்கம், புதியம்புத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கம், ஸ்பிக் தொழிலாளர் நலச்சங்கம், வாழை கடலை விவசாயிகள் சங்கம், பேய்குளம் நிலசுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கம், பெந்தகொஸ்தே சபை, சவேரியர்புரம் பங்குத்தந்தை ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
அப்போது, ‘தூத்துக்குடியில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சிக்கான வசதி செய்ய வேண்டும். பெரிய கனரக தொழிற்சாலை கொண்டுவர வேண்டும். தொழிற்பூங்கா அமைக்க வேண்டும். லாரிகள் நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். டிரைவர்களுக்கான பயிற்சி நிறுவனம் தொடங்க வேண்டும். மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயர்த்த வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த வேண்டும்.
தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதியை மீனவர்களுக்கு ஒதுக்க வேண்டும். சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். விவிடி சந்திப்பில் மேம்பாலம் விரைவாக அமைக்க வேண்டும். வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எளிதாக சிறு கடைகளில் கூட கிடைக்கிறது. பள்ளி சிறுவர்கள் கூட போதைப் பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். போதைப் பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.
தாமிரபரணி பாசனத்தில் உள்ள 53 குளங்களையும் தூர்வார வேண்டும். குடிமராமத்து திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மத சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் சொந்த இடத்தில், சொந்த செலவில் ஆலயம் கட்டுவதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். புனித வெள்ளி அன்று மதுபான கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ என்று அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்து எடப்பாடி கே.பழனிச்சாமி பேசியது: “அதிமுக அரசு இருக்கும்போது, தூத்துக்குடி விமான நிலையம் அமைக்க சுமார் 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக ஆட்சியிலும், குறிப்பிட்ட அளவு இடத்தையும் கையகப்படுத்தி கொடுத்தார்கள். நிலம் எடுப்பதற்கு முழு காரணம் அதிமுக அரசுதான்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் தூத்துக்குடியில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி வி.வி.டி. சந்திப்பு பகுதியில் பாலம் அமைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும், அந்த வழக்கில் நீதிமன்றம் மூலம் தீர்ப்பு பெற்று பாலம் கட்டப்படும். பனைத் தொழிலில் அதிகமாக ஈடுபட்டு உள்ளார்கள். அவர்களுக்கு எந்தெந்த விதத்தில் அரசு உதவி செய்ய முடியுமோ, அந்த வகையில் உதவி செய்யப்படும். உப்பள தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்துக் கொடுக்கப்படும்.
விவசாயிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் குளங்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அதுவும் நிறைவேற்றப்படும். தொழில் தொடங்க எளிதாக அனுமதி பெறுவதற்காக ஒற்றைச் சாளர முறையை மீண்டும் கொண்டு வந்து உடனுக்குடன் அனுமதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
அ.தி.மு.க ஆட்சியில்தான் நல்ல சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. 2011 – 2021 வரை நான்தான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் கிராமம் முதல் நகரம் வரை நவீன முறையில் அனைத்து சாலைகளும் தரமாக அமைக்கப்பட்டன. இந்தியாவிலேயே அதிக நீளம் தார்சாலை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்ற சூழலை உருவாக்கினோம்.
போதைப் பொருள் விற்பனையை தடுக்க சட்டமன்றத்தில் பேசினேன். 2022-ம் ஆண்டு போலீஸ் துறை மானிய கோரிக்கையின்போது, பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 2,348 பேர் கண்டறியப்பட்டு இருப்பதாகவும், இதில் 140 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். இப்படி இருந்தால் எப்படி போதைப் பொருளை தடுக்க முடியும். அப்படியென்றால் யார் விற்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
அரசு சரியான நடவடிக்கை எடுத்தால்தான் நிறுத்த முடியும். நான் 3 ஆண்டுகளாக தொடர்ந்து பத்திரிகை, பொதுக்கூட்டம் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த அரசு அதற்கு சரியான கவனம் செலுத்தாததால் எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை நடக்கிறது.
கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் சீண்டல் நடப்பதற்கு போதைப் பொருள் பழக்கம் காரணமாக உள்ளது. போதைக்கு அடிமையாகிவிட்டால் மீண்டு வர முடியாது. அந்த குடும்பமே சீரழிந்து விடும். அதனை இந்த அரசுக்கு பலமுறை உணர்த்திவிட்டேன். ஆனால், அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை.
போலீஸாருக்கு முழு சுதந்திரம் கொடுத்தால்தான் இதனை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் மிகவும் கஷ்டம். என்னுடைய அரசாங்கத்தை பொறுத்தவரை நான் கடுமையாக இருப்பேன். 2021-க்கு முன்பு போலீஸ் எப்படி இருந்ததது, அதற்கு பிறகு 50 மாத திமுக ஆட்சி காலத்தில் சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை சீர்தூக்கி பார்த்தால், இரண்டு அரசுக்கும் என்ன வித்தியாசம் என்பது தெளிவாக தெரியும்.
இந்த மக்களின் கோரிக்கை டி.வி வழியாக முதல்வர் கவனத்துக்கு செல்லும். அவர் பார்ப்பார் என்று கருதுகிறேன். பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதனை நிறைவேற்றவில்லை. தற்போது மக்களே அழுத்தம் கொடுத்துள்ளார்கள். இப்பவாவது முதல்வர் இதனை பார்த்து தெரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உண்மையாகவே தமிழகத்தில் பெண்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது.
கஞ்சா பயன்படுத்துபவர்கள் தங்களையே மறந்து தவறு செய்கிறார்கள். எனவே இது மிகவும் கொடியது. அதனை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று நீங்களும், நானும் வேண்டுகிறோம். நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நடக்காவிட்டால் அடுத்த ஆண்டு அ.தி.மு.க. அரசு அமையும்போது, நிச்சயமாக இதனை இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன். அனைவரின் எண்ணமும் ஒருமித்த கருத்தாக இருப்பதால், இதற்கு முடிவுகட்டப்படும்” என்று பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து ஆண்டு பெருவிழா நடைபெற்று வரும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்துக்கு சென்று எடப்பாடி பழனிசாமி வழிப்பட்டார். அவருக்கு தூய பனிமய மாதா படத்தை அளித்து பங்குத்தந்தை ஸ்டார்வின் ஆசி வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.