திண்டுக்கல்: அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல திட்டங்களை கொடுத்துள்ளோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திண்டுக்கல்லில் வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்தக் கூட்டத்தில், திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் சார்பில் பேசிய முருகேசன், “சொத்துவரியை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கின்றனர். இதே நிலை சென்றால் சொத்தை விற்றுதான் சொத்துவரி கட்டவேண்டும். 100 சதவீதத்திற்கு மேல் சொத்துவரி அதிகரித்துள்ளது. மாநகராட்சியில் ஏழு வகையான வரிகளை ஒன்று சேர்த்து ஒரே வரியாக கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் கிருபாகரன் பேசுகையில், “திண்டுக்கல் பேருந்து நிலையத்தை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதை விரைவுபடுத்த வேண்டும். தொழில் உரிமம் கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்றார்.
ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் ராஜ்குமார் பேசுகையில், “ஹோட்டல் தொழிலுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். ரவுடிகள் தொந்தரவு அதிகம் உள்ளது. உங்கள் ஆட்சி வந்தவுடன் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து நிலக்கடலை பருப்பு வியாபாரிகள் சங்கம், தோல் வர்த்தகர் சங்கம், கிறிஸ்தவ சபையினர், விவசாயிகள் சங்கத்தினர், கைத்தறி நெசவாளர் சங்கம் உள்ளிட்ட 17 சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
கோரிக்கை மனுக்களை பெற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: வரி உயர்வு குறித்து இங்கு தெரிவித்தனர். உங்கள் கோரிக்கைகள் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றித்தரப்படும்.
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல திட்டங்களை கொடுத்துள்ளோம். இரண்டு முறை பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம். விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக கொடுத்தோம். அதிமுக ஆட்சி அமைத்த பின்பு தமிழகத்தில் அனைத்து அணைகளும் தூர்வாரப்படும்.
வன்னியர் கிறிஸ்துவ மக்களை சீர் மரபினர் வகுப்பில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுக ஆட்சி வந்த உடன் இது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும்.தோல் தொழிற்சாலைகள் வரி உயர்வினால் தொழில் முடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதையும் மத்திய அரசுடன் பேசி புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
திண்டுக்கல்லில் ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். ரவுடிகள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதாகவும் கூறினார்கள். அதிமுக ஆட்சியில் ரவுடிகள் ஒடுக்கப்பட்டனர். பலர் பயந்து வெளிமாநிலங்களுக்கும் ஓடினர். இன்று போதைப்பொருள் அதிகமான காரணத்தினால்தான் இந்த பிரச்சினை வருகிறது.
ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் உரிமையாளரை அடிப்பது என இப்படிப்பட்ட நிகழ்வு அண்மைக்காலமாக நடந்து வருகிறது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்றார்.
கூட்டத்தில் தோல் வர்த்தகர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், நிலக்கடலை பருப்பு வியாபாரிகள் சங்கம், கைத்தறி நெசவாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.