குன்னம்: “திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் மூலம் உறுப்பினர்களைச் சேர்க்கிறார்கள். யாரும் உறுப்பினராக சேரவில்லை என்றால், உரிமைத் தொகை நிறுத்துவார்களாம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட காலத்துக்கும் சேர்த்து கொடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார சுற்றுப் பயணத்தை அரியலூர் மாவட்டத்தில் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாலையில் குன்னம் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் மத்தியில் பேசியது: “குன்னம் தொகுதியின் அத்தனை வாக்காளர்களும் குழுமி, இந்த பூமியே அதிரும் அளவுக்கு கடல் போல் காட்சியளிக்கிறது.
ஸ்டாலினும், உதயநிதியும் பேட்டியிலும், பொதுக் கூட்டத்திலும் 2026 தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என்று பொய்யான செய்தியைச் சொல்கிறார்கள். குன்னம் தொகுதிக்கு வந்து எழுச்சியைப் பாருங்கள், இந்த எழுச்சியே வெற்றியைக் காட்டும். வெற்றி விழா காணுகிற காட்சியாகவே இந்தக் கூட்டத்தைப் பார்க்கிறேன். 200 இடங்கள் என்று திமுக கனவு காணலாம். ஆனால் அதிமுக 210 இடங்களில் வெல்லும். ஸ்டாலின் தலைமையில் 50 மாத காலம் ஓடிவிட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு ஏதாவது திட்டம் கொடுத்திருக்கிறார்களா?
தந்திரமாக மக்களை ஏமாற்றி ஆட்சி செய்கிறது திமுக. மகளிர் உரிமை தொகை 1,000 ரூபாய் கொடுப்பதாக சொல்கிறார். அது மக்களின் வரிப் பணம், உங்கள் பணம் இல்லை. அதுவும் 28 மாதங்கள் கழித்து அதிமுக பல முறை கேட்ட பின்னர் தான் கொடுக்க முன் வந்தது. நாங்கள் தான் அழுத்தம் கொடுத்து கொடுக்கச் செய்தோம்.
ஆனால், இப்போது பேசுவதெல்லாம் ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்ததாக தவறான கருத்தைப் பதிய வைக்கிறார். இப்போது விடுபட்டவர்களுக்கு 30 லட்சம் பேருக்கு கொடுப்பதாக சொல்கிறார். அதுவும் மக்கள் மீது பரிதாபப்பட்டு கொடுக்கவில்லை. தேர்தல் வருகிறது, ஓட்டு தேவை. அதுதான் காரணம். ஆக, மக்களுக்காக இல்லை, ஓட்டுக்காகவே கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்.
2021 தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் 1,500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னோம். ஆனால், ஸ்டாலினும் சகாக்களும் பொய்யைப் பேசி ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். வெறும் 10% வாக்குறுதிதான் நிறைவேற்றி உள்ளனர். குன்னம் விவசாயிகள் நிறைந்த பகுதி. 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள் சம்பள உயர்வு என்று சொன்னார்கள். ஆனால், 50 நாள் என சுருங்கிவிட்டது. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். பல மாதம் சம்பளம் நின்று போய்விட்டது. இதற்கு மத்திய அரசு மீது பழிபோட்டார்.
நாங்கள் மத்திய அமைச்சரை பார்த்து பேசியபோது ‘கணக்கே கொடுக்கவில்லை, ஊழல் செய்திருக்கிறார்கள்’ என்று சொன்னார். இருந்தபோதும் நான் கேட்டுகொண்டதற்கு இனங்க ரூ.2,919 கோடி விடுவித்தார். ஊழல் நடந்ததால் தான் உரிய நேரத்தில் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. ஏழைகள் வயிற்றில் அடிக்கும் ஒரே கட்சி திமுக. காற்றை கண்ணால் பார்க்க முடியுமா? இந்த மாவட்டத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர் கண்ணில் பார்க்க முடியாத காற்றிலும் ஊழல் செய்தவர். இவர்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்ததால் மக்கள் துன்பத்தில் உள்ளனர். இவர்களால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது?
திமுகவின் திட்டங்களை ஸ்டாலின் சொன்னார், உதயநிதி சொன்னார்… யாரும் கேட்கவில்லை. அதனால், திமுக திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்திருக்கின்றனர். தினமும் பேட்டி கொடுக்கணுமாம். இதற்கு என்று துறை இருக்கிறது. அதுதான் வெளியிடணும். மக்கள் செல்வாக்கு இழந்தததால், மக்களை குழப்பி மீண்டும் ஆட்சிக்கு வர கூடுதல் தலைமைச் செயலாளரை நியமித்திருக்கிறார்கள்.
அமுதா பேசுகிறார்… 1 கோடியே 5 லட்சம் பேருக்கும் மனு வாங்கி, 1 கோடியே 1 லட்சம் பேருக்கு தீர்வு காணப்பட்டது என்கிறார். இது உண்மை என்றால் முழு விளக்கம் கொடுங்களேன். இல்லை எனில், அதிமுக ஆட்சி வந்ததும் பொய் சொன்னதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திமுக முக்கியம் எனில், அக்கட்சியில் சேர்ந்துவிட்டு, அப்புறம் பேட்டி கொடுங்கள். அரசு அதிகாரியா இருந்துகொண்டு தவறான புள்ளி விவரம் கொடுக்காதீர்கள். அதற்கான முழு பொறுப்பை நீங்கள் தான் ஏற்க வேண்டும்.
நான் கள்ளத்தனமாக அமித் ஷாவை சந்தித்தேன் என்கிறார் உதயநிதி. அவர் இந்திய உள்துறை அமைச்சர். அவரை பார்க்கக் கூடாதா..? நான் டெல்லி போனபோது தமிழ்நாட்டு பிரச்னையை பேசுங்க என்று உங்கள் தந்தை ஸ்டாலின் சொன்னார். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மத்திய அரசுக்கு பிரச்சினையைக் கொண்டுசென்று நிவாரணம் பெற்றுக்கொடுத்தோம்.
அதிமுக ஆட்சியில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடக்க பணி தொடங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை கைவிட்டுவிட்டனர். அதில் எனக்கு அதிகாரம் இல்லை என்று ஸ்டாலின் பொய் சொல்கிறார். நான் முதல்வராக இருக்கும் போது எனக்கு அதிகாரம் இருந்தது, உங்களுக்கு ஏன் இல்லை. தட்டிக் கழிக்கிறார். இதனால் மத்திய அரசிடம் பேசினேன். மத்திய அரசு இப்போது அறிவித்துவிட்டது. சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கக் கூடாது என்கிற ஸ்டாலின் எண்ணத்துக்கு மரண அடி கொடுத்தது. நீங்கள் செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. அதனால் தான் நான் அமித் ஷா கதவை தட்டினேன்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் கொண்டு வருகிறார். வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்கிறார். பிச்சை எடுக்கும் அளவுக்கு திமுகவை கொண்டு வந்துவிட்டார்கள் அப்பாவும் மகனும். யாரும் உறுப்பினராக சேரவில்லை என்றால், உரிமைத் தொகை நிறுத்துவார்களாம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்ட காலத்துக்கும் சேர்த்து கொடுக்கப்படும்.
பாஜகவை கண்டு இபிஎஸ் பயப்படுகிறார் என்கிறார். பயம் என்ற சொல்லே எனக்குத் தெரியாது. இது மண் வெட்டி புடித்த கை. நான் விவசாயி. ஆட்சி அதிகாரம் முக்கியமல்ல, மக்கள்தான் முக்கியம். மக்களுக்காக எந்த தியாகமும் செய்வோம். 2 கோடி தொண்டனும் செய்வான். நான் முதல்வராக இருந்தபோது மோடி சென்னை வந்தபோது கறுப்பு பலூன் விட்டார் ஸ்டாலின். இப்போது மோடியை ரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கிறார்.
சென்னைக்கு அழைத்து கலைவாணர் அரங்கில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்துகிறார்கள். அப்போது பிரதமர் நல்லவர் கேலோ இந்தியா போட்டி உதயநிதி நடத்துறார், செஸ் ஒலிம்பியாட் விழாவுக்கு அழைத்து வந்தனர். அப்போதெல்லாம் மோடி நல்லவர், இப்போது மட்டும் கெட்டவரா..?
திமுக 1999-ல் பாஜகவோடு கூட்டணி போட்டு மத்திய அமைச்சராக இருந்தார்கள். அப்போதெல்லாம் பாஜக மதவாதக் கட்சியாகத் தெரியவில்லை, அதிமுக கூட்டணி வைத்தால் மட்டும் மதவாதக் கட்சியா? கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது. எதிரிகளை வீழ்த்த பாஜக வந்திருக்கிறது. இன்னும் பல கட்சிகள் வரும். 2026-ல் அதிக வாக்குகளைப்பெற்று அதிமுக பெரும்பான்மையுடன் தனியாக ஆட்சி அமைக்கும்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ 46 திட்டங்களை நோட்டீஸில் அடித்திருக்கிறார். நான்கு வருடம் கழித்து அவருக்கு மக்கள் ஞாபகம் வருது. இத்தனை நாள் குடும்பத்துடன் ஸ்டாலினாக இருந்தவர், இப்போது வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்து, உடனே தீர்வு கொடுப்பாராம். நான் முதல்வராக இருக்கும்போது ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பெட்டிக்குள் மனுவை போட சொன்னார்கள். ஆட்சி அமைந்ததும் மனுக்களை திறந்து பார்த்து நிவர்த்தி செய்யப்படும் என்றனர். ஏற்கெனவே குறைகளை மக்கள் கொடுத்துட்டாங்க… அப்புறம் எதற்கு இது?
சபரீசன் தான் இந்த திட்டம் பற்றி ஸ்டாலினுக்கு சொல்லியிருக்கிறார். மக்கள் இதை நம்பி வாக்களிப்பார்கள் என்கிறார். ஆசையை தூண்டினால் மக்கள் மனதை மாற்றிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மக்களைத் தேடி வருவாய்த் துறை திட்டம் கொண்டு வந்தார். அப்போது வீடு வீடாகச் சென்று தீர்வு கண்டாகிவிட்டது. இதற்கு ஸ்டிக்கர் ஒட்டி, கண் காது மூக்கு வைத்து திமுக திருடியிருக்கிறது. இது எங்களுடைய திட்டம். ஆனால், நாங்கள் உங்களைப் போன்று ஏமாற்றவில்லை.
மணல் கொள்ளை, கனிம வளம் கொள்ளை அதிகமாகிவிட்டது. கரூர் மாவட்டம், மனமங்கலம் தாலுகாவில் வாங்கல் என்ற இடத்தில் மணல் கொள்ளையைத் தடுத்தவர் வெட்டப்பட்டு இறந்தார். எப்படிப்பட்ட அவல நிலை இது? இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து வெட்டுக் குத்து அதிகம். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று டெல்லியில் விருது வாங்கினேன். அப்படிப்பட்ட மாநிலம் இப்போது அமைதி இழந்துவிட்டது.
பாலியல் வன்கொடுமை, எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை. இதுவரை திமுக ஆட்சியில் 7,737 கொலைகள் நடந்திருக்கிறது. 730 கொலைகள், இந்த ஆறு மாதத்தில். தமிழ்நாடு கொலை மாநிலம் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் நேரம் இது.
குன்னம் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டம்… வேம்பூர் கலை கல்லூரி, ஆலத்தூர் ஒன்றியம் மருதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம், வேப்பூர் ஒன்றியம் துணை மின் நிலையம், வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணைகள், ஆசிரியர் பயிற்சி நிலையம் கொடுத்தோம். அரசு போக்குவரத்து பணிமனை, முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை, ஆரம்ப சுகாதார நிலையம், இதெல்லாம் கேட்டிருக்கிறீர்கள். கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
இது ஏழைகள், விவசாயிகள் பகுதி. அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க லேப் டாப் கொடுத்தோம். நம் பிள்ளைகள் நன்றாகப் படிப்பது ஸ்டாலினுக்கு பிடிக்காது. அதை நிறுத்திவிட்டார்கள். 52 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்களுக்கு 7,300 கோடி ரூபாயில் லேப் டாப் கொடுத்தோம். மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால் இந்த திட்டம் தொடரும்.
மக்காசோளம், எள்ளு, கடலை பயிர் உற்பத்தி பெருக்குவதற்கு உதவி செய்வோம். இந்த பயணம் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆட்சியை முடிக்கும் பயணம். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை; நாம்தான் பிள்ளைகள். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்…” என்றார் எடப்பாடி பழனிசாமி.