திருப்பத்தூர்: “அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப் பயணத்தை கடந்த மாதம் தொடங்கினார். பல்வேறு மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து வரும் அவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி வரவேற்பு அளித்தார். இதையடுத்து, திருப்பத்தூரில் உள்ள சொகுசு ஓட்டலில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து, அவர் பேசும்போது, ‘‘இந்த 32 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அளித்த மனு மீது அதிமுக ஆட்சியில் விரைவில் தீர்வு காணப்படும். திமுக ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் 200 தடுப்பணைகள் கட்டுவதாக வாக்குறுதி அளித்தனர். அந்த அறிவிப்பு அதோடு நின்றுவிட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல நல்ல திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. குறிப்பாக, நீர் மேலாண்மை திட்டம் தற்போது இல்லை. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். அதேபோல, குடிமராமத்து திட்டமும் தொடரும். அம்மா மினி கிளினிக் மீண்டும் கொண்டு வரப்படும்.
அதிமுக ஆட்சியில் வணிகர்களுக்கு முழு பாதுகாப்பு இருந்தது. திமுக ஆட்சியில் இல்லை. ஆத்தூர் நகைக்கடை பஜாரில் பட்டப்பகலில் நகை வாங்குவது போல ஆசிட் வீசி நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் துணிச்சலாக திருட்டு நடக்கிறது. காவல் துறை சுதந்திரமாக செயல்படவில்லை. குற்றம் செய்பவர்களுக்கு காவல் துறை மீது அச்சம் இல்லை. இதனால், குற்றங்கள் அதிகரிக்கிறது.
உதவி காவல் ஆய்வாளர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. எல்லோருக்கும் பாதுகாப்பு காவல் துறை தான், அவர்களுக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் ரயில்வே பாலம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்து விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும்’’ என்றார்.
இதையடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, ‘‘ திருப்பத்தூர் மாவட்டத்தில் எழுச்சி பேரணி நடத்த உள்ளேன். இம்மாவட்டத்தில் 32 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்களது பிரச்சினைகளை மனுவாக அளித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பகிரங்கமாக பேச முடியாது. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமென்றாலும் எந்த கட்சிக்கு செல்லலாம். கட்சிக்கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும். அதை வெளியே சொல்ல முடியாது. தமிழகத்தில் அரசு பள்ளிகளை மூடுவது தான் திமுக அரசின் சாதனை. அதேபோல, திமுக ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தினமும் தங்கம், வெள்ளி விலை நிலவரம் வந்ததை காட்டிலும் தற்போது தினமும் கொலை சம்பவம் வெளியாகிறது.
ரவுடிகள் ராஜ்ஜியம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. போதை அதிகரித்துள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் குற்றச்செயல் அதிகரிக்க காரணமே, போதை பொருள் நடமாட்டம் தான் காரணம். திமுக அரசு கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களும் எது நல்லது என போகபோக தான் தெரியும். 50 திட்டங்கள் அறிவித்து அது கிடப்பில் உள்ளது.
அதேபோல, தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்களும் இருக்கும். திட்டம் அறிவிப்பதால் அது வெற்றிப்பெறாது..அதை நடைமுறைப்படுத்தினால் தான் மக்களிடம் வெற்றிப்பெறும். அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதில், சந்தர்ப்ப சூழ்நிலையை கொண்டு பிறகு கூட்டணி குறித்த பதிலை நாங்கள் தருவோம். கூட்டணி பொறுத்த வரை இன்னும் 8 மாதம் காலம் உள்ளது.
எங்கள் கூட்டணி தலைமை ஏற்று இன்னும் பல கட்சிகள் எங்களுடன் இணைவார்கள். ரஜினிகாந்த் 50 ஆண்டுகள் திரைத்துறையில் இருந்ததை பாராட்டி காலையிலேயே எக்ஸ் தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்’’ என்றார். அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, எம்பி தம்பிதுரை, வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.