தென்காசி: “வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செய்து கொடுக்கப்படும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று இரவு குற்றாலத்துக்கு வந்த அவர், இன்று காலையில் குற்றாலத்தில் மாற்றுத் திறனாளிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, மாற்றுத் திறனாளிகள் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பாடல்கள் பாடி உற்சாகப்படுத்தினர்.
தமிழக மாற்றுத் திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ஆர்.சண்முக சுந்தரம் பேசும்போது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 50-க்கும் மேற்பட்ட அரசாணைகளை வெளியிட்டார். அவை எல்லாமே எங்களுக்கு கொடுத்த நெய் அல்வா. அவை எதுவுமே மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படவில்லை. சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை வைக்க அனுமதி அளிப்பதாக அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.
மாற்றுத் திறனாளிகளின் கடையை உடைத்து எறிந்து, இடத்தை திமுகவினர் ஆக்கிரமித்துக்கொண்டனர். ஊராக உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என்றனர். ஆனால் எங்களை ஏலத்தில் பங்கேற்க அனுமதி கொடுக்காமல் கடைகளை முழுவதும் எடுத்துக்கொண்டனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அணியை உருவாக்கிவிட்டன. அதேபோல் அதிமுகவிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அணியை உருவாக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை பெற்று, தேர்தல் அறிக்கையில் அதிமுக அறிவிக்க வேண்டும்” என்றார்.
சங்கத்தின் மாநில பொருளாளர் காந்திமதி பேசும்போது, “திமுக ஆட்சியில் கற்றறிந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாயப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதாக கூறினர். ஆனால், யாருக்கும் வேலை வழங்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கற்றறிந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும்” என்றார்.
அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “அதிமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 10 ஆயிரம் பேருக்கு ரூ.52 கோடியில் வழங்கப்பட்டது. தசைச் சிதைவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மின்கல நாற்காலிகள் 5 ஆயிரம் பேருக்கு ரூ.45 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உயர்த்தி கொடுத்தோம். 2 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.330 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதும் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்க ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. அரசு பணிக்கு செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு பயணப்படி 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. சுய வேலைவாய்ப்பு மானியத்தை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கினோம்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளீர்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொண்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செய்து கொடுக்கப்படும். உடலில் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் நீங்கள்தான் முழுமை பெற்றவர்கள். படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சங்கத்தின் மாநில செயலாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இசக்கிசுப்பையா எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.