சிவகாசி: சிவகாசியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் சவுந்திரபாண்டியனின் 133-வது பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரத்ததானம் செய்தோருக்குச் சான்றிதழ் வழங்கினார்.
அதன்பின், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: 2-வது இடம் யாருக்கு என்பதில் திமுக, தவெக இடையே போட்டி நிலவுகிறது. டிசம்பருக்கு பின் தமிழகத்தில் அதிமுக அலை உருவாகும். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை கூட்டணிக்கு வலுச் சேர்க்கும்.
அதிகார மமதையில் உள்ள திமுக அமைச்சர்களுக்கு 2026 தேர்தல் பாடமாக அமையும். எம்.ஜி.ஆருக்கு பின் விஜயகாந்த் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர். விஜய காந்திடம் இருந்த பக்குவப்பட்ட தொண்டர்கள் விஜய்யிடம் இல்லை. விஜய்க்கு கூட்டம் கூடுகிறது என்பது உண்மை.
அஜித் வந்தால் அதைவிட 2 மடங்கு கூட்டம் வரும். தனித்து நின்று வெல்வோம் என விஜய் கூறுவது நடக்காத காரியம். திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும். இல்லையென்றால் இந்த தேர்தலுடன் தவெகவை திமுக அழித்து விடும், இவ்வாறு அவர் கூறினார்.