சென்னை / திண்டுக்கல்: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து கட்சிகளும் ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டன. அதிமுக தேர்தல் பிரச்சாரத்தை கடந்த ஜூலை மாதம் தொடங்கி,100 தொகுதிகளுக்கு மேல் பிரச்சாரத்தை முடித்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி ஒன்றிணைப்பு குறித்து குரலெழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கட்சியில் இருந்து வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். 10 நாட்கள் அவகாசம் தருகிறேன். இதை நிறைவேற்றாவிட்டால், அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்து கொண்டவர்களை இணைத்து கட்சியை ஒன்றுபடுத்த நான் பாடுபடுவேன். ஒன்றுபடாமல் நாளை அதிமுக ஆட்சி மலரும் என்று எவராலும் கூற முடியாது’’ என்று தெரிவித்திருந்தார்.
மூத்த தலைவரான செங்கோட்டையன் இவ்வாறு கூறியது, கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், திண்டுக்கல்லில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோருடன் பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை கூட்டம் 2 மணிநேரம் நீடித்தது. இதில், செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டது. அவரை ஆதரிக்கும் மாவட்ட, ஒன்றிய கட்சி நிர்வாகிகளையும் நீக்க முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை பறித்து,அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் – மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன் செப்.6-ம் தேதி (நேற்று) முதல் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். ஈரோடு புறநகர் – மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்ட கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கே.செல்வராஜ்எம்எல்ஏ நியமிக்கப்படுகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.
கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கைக்கு செங்கோட்டையன் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, கோபிசெட்டிபாளையத்தில் நேற்றுசெய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘ஜனநாயக முறைப்படி எங்கள் கட்சியில்யார் வேண்டுமானாலும் பேசலாம் எனமேடையில்தான் பழனிசாமி பேசுகிறார். நான் அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி பேசியது குறித்து கட்சி ஜனநாயக முறைப்படி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு எந்த விளக்கமும் கேட்காமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதற்கிடையே, போடியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ‘‘கட்சிப் பதவிகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை. இதற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’’ என்று தெரிவித்தார்.
7 ஆதரவாளர்களும் பொறுப்புகளில் இருந்து நீக்கம்: செங்கோட்டையன் மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பதவிகளில் இருந்து பழனிசாமி நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி (எ) ஏ.கே.சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி, கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் என்.டி.குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.தேவராஜ், அத்தாணி பேரூராட்சி செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ், துணைச் செயலாளர் வேலு (எ) தா.மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் கே.எஸ்.மோகன்குமார் ஆகியோர் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.