ஒட்டன்சத்திரம்: “அதிமுகவை எவ்வளவோ பேர் உடைக்கப்பார்க்கிறார்கள் முடக்கப் பார்க்கிறார்கள். இது தொண்டர்கள் மிகுந்த கட்சி. உயிரோட்டமுள்ள கட்சி. எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது” என ஒட்டன்சத்திரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் முருங்கை விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும். கண் வலி விதை அதிமுக ஆட்சியில் நல்ல விலைக்கு போனது. தற்போது சிண்டிகேட் அமைத்து கண்வலி விதை விலையை குறைத்துவிட்டனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கண்வலி விதை விவசாயிகள் விற்பனை செய்ய உதவிசெய்யப்படும். அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பு கொடுத்தோம். அனைத்து குடும்ப அட்டைக்கும் ரூ.2500 கொடுத்தோம். திமுக ஆட்சியில் கொடுத்த பொருட்கள் பயன்படுத்த முடியவில்லை. ஒழுகும் வெல்லத்தை கொடுத்தனர்.
பொங்கல் பரிசாக உண்மையான வெல்லத்தை கொடுக்கவில்லை இங்குள்ள அமைச்சர். ஏழைகளுக்கு கொடுப்பதில் ஊழல் செய்யும் அரசு திமுக. மக்களுக்கான திட்டமாக கொண்டுவராமல் அவர்களுக்கு வருமானத்தி்ற்காக பொங்கல் தொகுப்பு திட்டத்தை கொண்டுவந்தனர். ஏழை மக்களை வாட்டி வதைத்து அதன் மூலம் கிடைக்கும் பணம் நிலைக்காது.
ஆட்சிக்கு வந்தவுடன் கொள்ளையடிப்பதில் முதன்மையான அரசாக திமுக அரசு உள்ளது. 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் மூலம் இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்த கட்சி திமுக. கண்ணில் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக. தமிழகம் போராட்ட களமாக மாறிவிட்டது. ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். அதிமுகவை எவ்வளவோ பேர் உடைக்கப்பார்க்கிறார்கள். முடக்கப் பார்க்கிறார்கள். அத்தனையையும் உங்கள் துணையோடு தவிடுபொடியாக்கி வருகிறோம். இது தொண்டர்கள் மிகுந்த கட்சி, உயிரோட்டமுள்ள கட்சி, எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது.
அதிமுக வில் தான் சாதாரண தொண்டன் கூட எம்பி ஆகலாம், எம்எல்ஏ ஆகலாம். முதலமைச்சர் கூட ஆகலாம். பொதுச்செயலாளர் ஆக முடியும். ஆனால் திமுக குடும்பத்தில் பிறந்தால் தான் அங்கு பதவிக்கு வரமுடியும். இங்குள்ள அமைச்சர் பெரிய கோடீஸ்வரர். அடுத்தமுறை அவருக்கு வாய்ப்பு தராதீர்கள். இங்குள்ள எல்லாத்தையும் வாங்கிவிடுவார். உங்களை அன்னக்காவடி எடுக்க வைத்துவிடுவார். எனவே அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுங்கள்.
மதுரை மாநகராட்சி ஊழலில் மேயரின் கணவரை கைது செய்கிறார்கள். மேயர் இல்லாமல் ஊழல் செய்யமுடியுமா? மேயரை ஏன் கைது செய்யவில்லை? அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1500 கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம். ஏழை மக்களின் சொத்து அதிமுக கட்சி. நீங்கள் எல்லோரும் அதிமுக ஆட்சிக்கு நல் ஆதரவை தரவேண்டும். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. பை பை ஸ்டாலின்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.