கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பழனிசாமி உறுதியளித்தால் 4 மாவட்ட கரும்பு விவசாயிகள் வரும் தேர்தலில் அதிமுகவுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள தயாராக இருப்பதாக திருமண்டங்குடியில் 955-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும், புதிய நிர்வாகம் வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்து, சிபில் ஸ்கோர் பிரச்சினையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2022 நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
955-வது நாளாக நேற்று போராட்டத்தில் பங்கேற்ற கரும்பு விவசாயிகள் சரபோஜி, செந்தில் ஆகியோர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் நிறைவேற்றுவதாக தெரியவில்லை. இதனால், கரும்பு விவசாயிகள் முதல்வர் மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே, பாபநாசம் தொகுதிக்கு ஜூலை 22-ம் தேதி வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து கோரிக்கைகளை எடுத்துக்கூற அனுமதி கேட்டுள்ளோம்.
அப்போது, அடுத்து அதிமுக ஆட்சி அமைந்தால், எங்களது கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்க வேண்டும். அப்படி உறுதியளித்தால், திருமண்டங்குடி சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்ட கரும்பு விவசாயிகளை திரட்டி, அந்தந்த தொகுதியில் அதிமுகவுக்கு ஆதரவாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.