“எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி, ஜெயலலிதாவால் கட்டிக் காப்பாற்றப்பட்ட கட்சி, இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா?” என்று புதிதாக உருவான ஒரு கட்சியின் தலைவர் கேள்வி எழுப்புகிறார். ஆம், தவெக தலைவர் விஜய்தான் அவர். விஜய்க்கு பதிலடி கொடுக்கும் இபிஎஸ் ஆதரவாளர்களோ, “எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அனுபவ வயதுதான் கேள்வி எழுப்பிய அந்தத் தலைவரின் வயது” என்பதோடு நிறுத்திக் கொள்கின்றனர்.
இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பிடிக்காவிட்டாலும், கட்சி மீதான பிடி சற்றும் தளர்ந்துவிடாமல் தக்கவைத்துக் கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமியை கட்சிக்குள்ளேயே சிலரும், எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கின்ற வேளையில், அவர் குறைத்து மதிப்பிடப்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. அது பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.
சேலம் மாவட்டத்தின் சின்னஞ்சிறு கிராமமான சிலுவம்பாளையம் தான் எடப்பாடி பழனிசாமியின் ஊர். கல்வி பெரிதாக கைகொடுக்காததால் அவர் கையில் எடுத்தது என்னவோ வெல்ல வியாபாரம். அந்த வியாபாரம் கொடி கட்டிப் பறந்தாலும் கூட எம்ஜிஆர் மீதான அபிமானத்தால், தீவிர ஈர்ப்பால் அவர் அதிமுகவை ஆரம்பித்தவுடனேயே கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதிமுகவுடன் சேர்ந்தே வளர்ந்தவர் எடப்பாடி என்றால் அது மிகையாகாது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 1989-ம் ஆண்டு அதிமுக – (ஜெ) அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990-ம் ஆண்டு சேலம் வடக்கு மாவட்டம் இணைச் செயலாளராகவும், 1991-ம் ஆண்டு சேலம் வடக்கு மாவட்டம் செயலாளராகவும் ஆனார். அதே ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் 2011-ல் தான் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றார். இடையில், 1998-ம் ஆண்டு திருச்சங்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். 2011-ஐ தொடர்ந்து 2016 தேர்தலிலும் வெற்றி பெற்றார். 2011-ல் நெடுஞ்சாலை துறை, 2016-ல் பொதுப்பணித் துறை என அவருக்கு அமைச்சர் பதவிகளும் வந்தன. 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். எடப்பாடி அவர் பெயருக்கு அடைமொழி மட்டுமல்ல, அவரது அரசியல் கோட்டையும் கூட.
அரசியலில் ஆரம்ப காலங்களில் அதிமுகவில் அவரை ஆதரித்தவர்களில் முக்கியமானவர்கள் செங்கோட்டையன். அதேபோல் வழக்குகள், பிரச்சினைகள் என்று சிக்கியபோது அவரை காப்பாற்றியவர் அப்போதைய அதிமுக அமைச்சராக இருந்த முத்துசாமி என்ற தகவல்களும் உண்டு. அதேபோல் எடப்பாடி அரசியலில் சிறு பின்னடைவு சந்தித்ததற்கு காரணமும் செங்கோட்டையனை அவர் பகைத்துக் கொண்டதும், கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகளை சம்பாதித்ததும் என்பதும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
பல்வேறு பிரச்சினைகளைக் கடந்து, கிளைச் செயலாளர், அமைப்புச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர், இடைக்கால பொதுச் செயலாளர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இப்போது கட்சியின் பொதுச் செயலாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமியில் செல்வாக்கை அவ்வளவு எளிதாக குறைத்து மதிப்பிட்ட முடியாது என்கின்றனர் கள அரசியல் நிபுணர்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவுக்கு என்ன ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. கூவத்தூர் களேபரங்களுக்கு இடையே எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா. சசிகலாவின் அபிமானத்தை அவ்வளவு அதிகமாகப் பெற்றிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரை வணங்கி வழியனுப்பி வைத்த இபிஎஸ், வெகு விரைவில் 180 டிகிரி டர்ன் எடுத்து சசிகலாவிடமிருந்து கட்சியை மீட்போம் என்றார்.
தர்மயுத்தம் நடத்தி தனியாக இருந்த ஓபிஎஸ் வந்து சேர ‘இது இணைந்த கைகள்’ என்று கூறிய இபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்புகளைப் பங்கிட்டுக் கொண்டனர். அதன்பின் ஒற்றைத் தலைமை யுத்தத்தில் சத்தமின்றி வெற்றி வாகை சூடி முதல்வர் பதவியில் நீடித்தார்.
இன்றைக்கு அதிமுகவின் கட்சி சின்னப் பிரச்சினை, பொதுச் செயலளாராக நியமிக்கப்பட்டதில் பிரச்சினை என எது வந்தாலும் அதை தாக்குப் பிடிக்கிறார். டெல்லி தலைமையிடம் ஓபிஎஸ், டிடிவி என பலரும் முறையிட்டு ஒன்றிணைந்த அதிமுகவுக்கு குரல் கொடுத்தாலும் டெல்லி மேலிடத்திடம் என்டிஏ கூட்டணி வேண்டுமென்றால் ‘நான் உள்ளே; அவர்கள் வெளியே’ என்று ஸ்ட்ராங்காக கெடுபிடி காட்டியவர்.
இவற்றின் பலன்தானோ என்னவோ ஓபிஎஸ்ஸிடம் பிரதமர் திடீரென காட்டும் பாராமுகம். ஓபிஎஸ்ஸும், அடுத்து டிடிவியும் வெளியேறிவிட தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்டம் கொண்டிருக்கிறது என்ற விமர்சனங்கள் வலுக்க, அதெல்லாம் இல்லை… அதிமுகவின் முகம் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை நிறுவுவதில் வெற்றி பெற்றது போலவே தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
குறிப்பாக, பாசிடிவ் – நெகட்டிவ் உத்திகளுடன் தமிழகத்தில் பாஜகவை பட்டிதொட்டிகளுக்கு கொண்டு சென்ற அண்ணாமலையின் ‘முகவரி’யை ‘அசால்ட்’ ஆக ஒளித்து வைத்தவர் இபிஎஸ். ஆம், தனக்கு ‘ஆகாத’ அண்ணாமலையை கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அகற்றிவிட்டுதான் அந்தக் கட்சியுடன் கூட்டணிக்கு கைகோத்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
அதேபோல் என்டிஏ கூட்டணி ஆட்சி பற்றிய அமித் ஷா கருத்துகள் சர்ச்சையான போதும், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார். எங்கள் கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும், “ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களைப் பாதுகாக்க அதிமுக என்றும் துணை நிற்கும்” என்று தனது பயணத்தில் நிறுவி வருகிறார். ஆட்சி அதிகாரம் என்பதைவிட அதிமுக என்ற கட்சியை ஜெயலலிதா வைத்திருந்த ‘ராணுவ ஒழுக்கத்தோடு’ வைத்திருக்க வேண்டும் என்பதில் ஜெ. பாணியில் இபிஎஸ் சென்று கொண்டிருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
செங்கோட்டையன் விவகாரத்திலும் அவர் ஜெயலலிதாவைப் போலவே நடந்துள்ளார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். செங்கோட்டையன் 10 நாள் கெடு விதிக்க, அடுத்த நாளே அவரது கட்சிப் பதவிகளைப் பறித்து உத்தரவிட்டார். இது யாரும் எதிர்பார்க்காத நடவடிக்கை என்றே சொல்லலாம்.
எல்லோரும் எடப்பாடி என்ன எதிர்வினையாற்றுவார் என்று எதிர்பார்த்திருக்க, செயலில் காட்டியுள்ளார் இபிஎஸ். அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான் திமுகவுக்கு படையெடுத்ததை எல்லாம் போகிற போக்கில் கூட விமர்சிக்காமல், அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியிதாக நிறுவினார்.
அதிமுகவில் ஜெயலலிதாவுடனேயே இருந்த சசிகலா, ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று சவால்விட்ட டிடிவி தினகரன் என்று கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் போல் பெற்ற எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை எடுத்த எடுப்பிலேயே டக் அவுட் ஆக்கிவிட்டிருக்கிறார்.
கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும் அவர் நினைத்ததை நடத்திக் கொண்டிருக்கும் இபிஎஸ்ஸை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு, செங்கோட்டையன் விவகாரத்தில் குளிர் காய நினைத்த திமுக-வுக்கும், கட்சியை என்ன செய்து வைத்திருக்கிறார் என்று கேள்வி எழுப்புவோருக்கும் இன்னமும் டஃப் ஃபைட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இபிஎஸ் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதிமுகவை ஃபுல் கன்ட்ரோலில் எடுக்கும் அவரது முயற்சி நிச்சயம் பலனளிக்கும் என்றும் கணிக்கின்றனர்.
அதேவேளையில் செங்கோட்டையன் போன்ற மூத்தவர்களின் எதிர்ப்பை இன்னும் நிதானமாக கையாண்டு, அதிமுகவில் இன்னொரு அணி உருவாகாமல் இருப்பதை உறுதி செய்வதும், பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து காய் நகர்த்தினால் கட்சியில் ஏற்படும் சேதாரத்தை சரிசெய்வதும் அவசியம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.