புதுச்சேரி: “ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா இணைந்தால் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு பிரச்சினை வரும். அதனால் அதை அவர் ஏற்க மாட்டார். அதிமுக உடைந்த கண்ணாடி ஒட்டவைப்பது கடினம்.” என்று சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்து அரசுப் பள்ளிகளில் சமச்சீர் கல்வியை அனுமதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெல்லித்தோப்பு சுப்பையா சிலையிலிருந்து பேரணி இன்று தொடங்கியது. இப்பேரணி கல்வித்துறை அலுவலகத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாநிலச் செயலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா, ராஜாங்கம், பெருமாள், தமிழ்ச்செல்வன், பிரபுராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு பிறகு பத்தாயிரம் பேர் பள்ளிக்கல்வியை தொடர முடியாமல் வெளியேறியுள்ளனர். பாஜக கொள்கையை மட்டும் நிறைவேற்றி மாணவர்கள் கல்வி கற்பதை தட்டிப்பறிப்பதால் கல்வியமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும். கல்வித் திட்டத்தை மாற்ற புதுச்சேரி அரசாங்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அரசுப் பள்ளியில் சிபிஎஸ்இயும், மாநில பாடத்திட்டமும் பள்ளிக்கல்வியில் இருக்கவேண்டும். கல்வியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் கலந்து பேசி சட்டப்பேரவையில் விவாதிப்பது அவசியம்.” என்றார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் கூறுகையில், டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கெடுபிடியான தீர்ப்பை நீதிமன்ற அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு போல் டெட் தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை பாதுகாக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. அமெரிக்க நிர்ப்பந்ததால் குறைக்கப்பட்டுள்ளது. அவ்வரி குறைப்பால் மாநில இழப்பீட்டை மத்திய அரசு ஈடு செய்யவேண்டும் என்பதை பரிசீலிக்க வேண்டும் என்றார்.
அதிமுக ஒன்றிணையுமா என்று கேட்டதற்கு, “அதிமுக ஒரு உடைந்த கண்ணாடி. அதை மீண்டும் ஒட்ட வைப்பது மிகவும் கடினம். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது முடியாத காரியம். அது காலம் கடந்து விட்டது. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை ஒன்றிணைத்தால் எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவிக்கு பிரச்சினை வரும். அதனால் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கமாட்டார்.” என்று குறிப்பிட்டார்.