கோபி: “தேர்தல் வெற்றிக்கு, தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு மறப்போம் மன்னிப்போம் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்ற வேண்டும். அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை அரவணைக்க வேண்டும்.” என்று கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செப்.5-ம் தேதி மனம் திறந்து பேசுவேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறியிருந்தார். இது, அதிமுகவிலும், தமிழக அரசியல் களத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர் திமுகவில் இணையப் போகிறார் என்றார் ஊகங்கள் எல்லாம் உதயமானது. இந்நிலையில், இது தொடர்பாக கோபியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செங்கோட்டையன் பேசியதாவது: அதிமுகவை 1972-ல் எம்ஜிஆர் தொடங்கினார். தொடர்ந்து கொல்லம்பாளையத்தில் கிளைச் செயலாராக எனது பணியைத் தொடங்கினேன். 1975-ல் கோவையில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதில் நான் பொருளாளராக எம்ஜிஆரால் நியமிக்கப்பட்டேன். எனது செயல்பாடுகளுக்காக என்னை அவர் பலமுறை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
எம்ஜிஆர் என்னை சத்தியமங்கலத்தில் போட்டியிடச் சொன்னார். நான் தயங்கியபோது, என் பெயரை சொன்னாலே வெற்றி கிடைக்கும் என்றார். அத்தகைய செல்வாக்கு மிக்க தலைவர் அவர். மக்கள் மனதில் நிறைந்தவர். இந்தியாவின் சிறந்த முதல்வர் என்ற பெருமை பெற்றுத் தந்தார்.
அவருக்குப் பின்னர் ஆளுமைமிக்க, மக்கள் செல்வாக்குள்ள ஜெயலலிதாவே கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஜெயலலிதாவும் சிறந்த முதல்வராக இருந்தார். அவருடைய ஆட்சி 5 முறை அமைந்தது. ஆன்மிகவாதி, திராவிடவாதிகளால் போற்றப்பட்டார்.
அவரது மறைவுக்குப் பின்னர் இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வந்தன. அன்றைக்கு எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தோம். மீண்டும் முதல்வராக இப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழியப்பட்டார்.
இந்த இயக்கத்தில் பல்வேறு தடுமாற்றங்கள் வந்தபோதும் நான் தடுமாற்றமே இல்லாமல் திறம்பட பணியாற்றியுள்ளேன். அதற்காக ஜெயலலிதா என்னைப் பலமுறை பாராட்டியுள்ளார். நெடும் பயணத்தை மேற்கொள்ளும் போது பொறுப்புகள் கிடைக்கும், சோதனைகளும் வரும். தமிழகம் எப்படி இருக்க வேண்டும். தமிழக மக்கள் எப்படி செழிப்போடு வாழ வேண்டும் என்பதற்காக நான் தியாகம் செய்தேன். எனக்கு கட்சியில் இரண்டு வாய்ப்புகள் கிடைத்தபோதும், இயக்கத்துக்காக தியாகம் செய்தேன். 2016-க்குப் பிறகு தேர்தல் களத்தை அதிமுக சந்தித்திருக்கிறது. 2019, 2021 தேர்தல், 2024 தேர்தல், பின்னர் உள்ளாட்சித் தேர்தல் சந்தித்தபோது களத்தில் பல பிரச்சினைகள் நடந்தது.
அதிமுக தேர்தல் களத்தில் வெற்றிகரமாக இருக்க முன்னாள் முதல்வர் கொண்டிருந்த மறப்போம் மன்னிப்போம் என்ற எண்ணம் வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். வெளியே சென்றவர்கள் எந்தப் பொறுப்பும் தேவையில்லை என்று சொல்லும்போது அவர்களை அரவணைக்க வேண்டும். இதுவே எனது கோரிக்கை. இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் நான் அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்துகளைக் கொண்டவர்களை இணைத்து கட்சியை ஒன்றுபடுத்த நான் பாடுபடுவேன். ஒன்றுபடாமல் நாளை அதிமுக ஆட்சி மலரும் என்று எவராலும் கூற முடியாது.” என்று கூறினார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பேசிய செங்கோட்டையன் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி என்ற யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அதேபோல், எடப்பாடி பழனிசாமியின் பெயரையும் உச்சரிக்கவில்லை.