சென்னை: முன்னாள் எம்.பியும், அதிமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான அன்வர் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “தமிழ்நாட்டில் காலூன்ற துடிப்பது பாஜக-வின் எண்ணம். அது ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று அன்வர் ராஜா கூறியிருந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. விரைவில் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகுவார் என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று (ஜூலை 21) திமுகவில் இணைவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்துள்ளார் அன்வர் ராஜா. இந்த செய்தி ஊடகங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே அன்வர் ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்று வரை அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.