சென்னை: அதிமுகவின் நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை காப்பியடித்து தாயுமானவர் திட்டமாக திமுக செயல்படுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்சியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு பிப். 19-ம் தேதி சமர்ப்பித்த தமிழக பட்ஜெட்டில் ‘தாயுமானவர்’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் உள்ள குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குறைபாடுடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 18 மாதம் தாமதமாக, திமுக ஆட்சி முடிவடையும் தருவாயில், அறிவித்தபடி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் வழங்குதல் என்ற எந்தவித நன்மைகளையும் வழங்காமல், கடந்த 12-ம் தேதி வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கு ‘தாயுமானவர்’ என்றும் பெயர் சூட்டிஉள்ளனர்.
எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2020 நவ.21-ம் தேதி ரூ.9 கோடியில் 3,501 ‘நகரும் நியாய விலைக் கடைகள்’ தமிழகமெங்கும் தொடங்கிவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களுக்கு ‘காப்பி பேஸ்ட்’ செய்து, தனது பெயரை அல்லது புதுப் பெயரை சூட்டி அமல்படுத்துகின்றனர். அதன்படி தாயுமானவர் திட்டமும் காப்பி அடிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களைப் பார்த்து காப்பியடிக்கும் ஆட்சியாளர்கள் தமிழகத்துக்கு தேவையில்லை. சொந்தமாக சிந்தித்து, மக்களின் தேவைகளை உணர்ந்து, திட்டங்களை தீட்டுபவர்களே தமிழகத்துக்கு தேவை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.