உடுமலை: ‘2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், உடுமலை நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மணீஸ் நாரணவரே வரவேற்றார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் சு.முத்துசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் ரூ.949 கோடியே 53 லட்சத்தில், 61 முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்தும், ரூ.182 கோடியே 6 லட்சத்தில், 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.295 கோடியே 29 லட்சத்தில், 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மேற்கு மண்டலத்துக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் திமுக ஆட்சியில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தான் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என காட்டிக் கொண்டபோதும், அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த பகுதிக்காக எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி என்பது மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கப் போகிறது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் நலத் திட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் சென்ற சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த தோடு, நீதிமன்றங்களை அரசியல் மேடையாக ஆக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக அரசு அளித்துள்ள பட்டியல்படி முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. என்னைப் பொருத்தவரை பேச்சை குறைத்துக்கொண்டு செயலில் காட்ட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில் எம்.பி ஈஸ்வரசாமி மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, உடுமலை நேரு வீதியில் கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
‘ரோடு ஷோ’ – முன்னதாக தான் தங்கியிருந்த இல்லத்தில் இருந்து வேனில் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் நேதாஜி மைதானம் வரை சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்றார். சாலையில் நடந்து சென்ற அவர், இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றார்.
இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி சென்ற முதல்வர், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் உருவாகக் காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.கே.பழனிச்சாமி கவுண்டர், நா.மகாலிங்கம் ஆகியோரின் முழு உருவச் சிலைகளை திறந்து வைத்து மரியாதை செய்தார்.
நினைவரங்கத்தை திறந்துவைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த பிஏபி திட்டம் தொடர்பான புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து காரில் கோவை சென்று, மதியம் 2.10 மணிக்கு விமானத்தில் சென்னை புறப்பட்டார்.