அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தென் மாவட்டச் சுற்றுப் பயணத்தின் போது, முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான செல்லூர் கே.ராஜூவை தனது காரில் ஏற்ற மறுத்ததாக ஒரு சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக ஓபிஎஸ்கூட செல்லூர் ராஜூவுக்கு வக்காலத்து வாங்கிய நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பான எவ்வித வாட்டமோ, வருத்தமோ இன்றி எடப்பாடியாரின் மதுரை பிரச்சாரப் பயணத்துக்கான ஏற்பாடுகளில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ராஜூ.
‘இந்து தமிழ் திசை’ பேட்டிக்காக அவரைத் தொடர்பு கொண்ட போது, “எடப்பாடியார் புரோகிராம் சம்பந்தமா மாவட்டச் செயலாளர்களோட பேசிட்டிருக்கேன் தம்பி… அவங்கள அனுப்பிட்டு பேசுறேன்” என்று சொன்னவர், அதன்படியே லைனில் வந்தார். இனி, அவரது பேட்டி…
ஒற்றைத் தலைமையின் கீழ் வந்த பிறகு அதிமுக பலப்பட்டிருப்பதாக நம்புகிறீர்களா?
பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு அதிமுக உண்மையிலேயே பலமடைந்திருக்கிறது. தொண்டர்களின் எண்ணிக்கையை 2 கோடிக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளார். அவரது செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. அதனால் தான் ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ பிரச்சார பயணத்தில் பொதுமக்களும், தொண்டர்களும் ஆரவாரத்துடன் அவரை வரவேற்று வருகின்றனர்.
வெற்றிக் கூட்டணியை அமைப்போம் என எடப்பாடியார் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால், பாஜக-வை தவிர எந்தக் கட்சியும் அதிமுக கூட்டணிக்கு வந்ததாகத் தெரியவில்லையே?
தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கு. நிச்சயம் சில முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் பாருங்க.
கூட்டணிக்காக மத்திய அமைச்சர்கள் கூட போயஸ் கார்டன் வாசலில் காத்திருந்த காலம் போய், இப்போது மற்ற கட்சிகளின் வரவை எதிர்பார்த்து அதிமுக காத்திருக்க வேண்டி இருக்கிறதே?
அன்றைய காலகட்டம் வேறு, இன்றைய காலகட்டம் வேறு. அன்று போலவே இன்றும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நிச்சயமாக பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமையும்.
கூட்டணி ஆட்சி என்பதில் அதிமுக-வும் பாஜக-வும் குழப்பமாகவே பேசிவருகின்றனவே… இது மக்கள் மத்தியில் கூட்டணி மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடாதா?
கூட்டணி என்பது கட்சியின் கொள்கை இல்லை. அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப முடிவு செய்வது. தேர்தல் கூட்டணி குறித்து, அந்தந்த சூழலில் கட்சிக்கு எது ஆரோக்கியமோ அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். இவ்விஷயத்தில் அதிமுக, பாஜக தரப்பில் எந்தக் குழப்பமும் இல்லை. அதிமுக தலைமையில் ஆட்சி அமையும். தனித்து ஆட்சி அமைப்பது தான் அதிமுக-வின் கொள்கை. தமிழக மக்களும் அதைத்தான் விரும்புவார்கள். இது குறித்து பழனிசாமி ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார்.
அண்மைக்காலமாக அதிமுக-வில், தான் வைத்தது தான் சட்டம் என எடப்பாடியார் சர்வாதிகாரி போல் நடந்து கொள்வது போல் ஒரு தோற்றம் தெரிகிறதே..?
கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பதற்காக பழனிசாமி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. அவர், கட்சியில் சர்வாதிகாரம் செய்யவில்லை. அனைவரையும் அரவணைத்தே செல்கிறார்.
தென்மாவட்ட சுற்றுப் பயணத்தில் எடப்பாடியாரின் காரில் ஏறப்போன உங்களை அவர் தடுத்தது தொடர்பான வீடியோ வைரலானது. இந்த விஷயத்தில் நீங்கள் அப்செட்டானதாகச் சொல்கிறார்களே?
உண்மையில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுறுத்தலை தான் என்னிடம் பழனிசாமி தெரிவித்தார். அவர் என்னை எந்த வகையிலும் அவமதிக்கவில்லை. நானும் அப்செட் ஆகவில்லை. அதன் பிறகும் அவரது அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்றேன்.
உங்களுக்குச் சொந்தமான பணம் திருடுபோன விவகாரத்தில் முதல்வரிடமும் அமைச்சர் மூர்த்தியிடமும் பேசி உதவி கேட்டீர்கள் என்பதால் தான் எடப்பாடியாருக்கு உங்கள் மீது வருத்தம் என்கிறார்களே?
அந்த விவகாரம் தொடர்பாக நான் முதல்வரையோ, அமைச்சர் மூர்த்தியையோ சந்திக்கவும் இல்லை, அவர்களிடம் பேசவும் இல்லை. இது முழுக்க முழுக்க தவறான தகவல்.
பணம் திருட்டு விவகாரத்தை வைத்து உட்கட்சி எதிரிகள் உங்களுக்கும் தலைமைக்கும் இடையில் சிண்டுமுடிவதாக நினைக்கிறீர்களா?
உட்கட்சி அரசியல் எல்லா கட்சியிலும் இருக்கக்கூடியது. அது இருந்தால் தான் அரசியல் கட்சிகள் ஆரோக்கியமாக இருக்கும். அதையெல்லாம் நான் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. பழனிசாமி கொடுக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.
அன்வர் ராஜா, மைத்ரேயன் என அதிமுக முக்கிய நிர்வாகிகள் வரிசையாக அறிவாலயப் பிரவேசம் செய்து கொண்டிருக்கிறார்களே..?
அதிருப்தியாளர்கள் கட்சி மாறுவது வழக்கமான ஒன்று. அதிமுக-வில் இருந்து எவ்வளவோ பேர் வெளியேறியுள்ளனர். அதனால் அதிமுக ஒருபோதும் பலவீனம் அடைந்ததில்லை. மீண்டும் மீண்டும் மக்கள் எங்களை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து, அழகு பார்த்தது தான் வரலாறு.
எடப்பாடியார் மீது வருத்தத்தில் இருக்கும் நீங்களும் திமுக-வில் இணையலாம் என்றுகூட செய்திகள் வெளியானதே?
கடுகளவும் இதில் உண்மை இல்லை. பழனிசாமி, தனது 4-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குகிறார். அதற்கான ஏற்பாட்டு பணிகளில் தான் மூழ்கி இருக்கிறேன். பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்காக கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து வருகிறேன். இந்தச் சூழலில் இது போன்ற செய்திகள் வெளிவருவது நகைப்புக்குரியதாக உள்ளது.
கட்சியை இழுத்துப் பிடித்து நிறுத்துவதற்காக பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் பதவிகளை வழங்கிவிட்டு, முடிவுகளை நான் மட்டும் தான் எடுப்பேன் என்று எடப்பாடியார் சொல்வது சரிதானா?
பழனிசாமி பழுத்த அரசியல்வாதி. நீண்டகால அரசியல் அனுபவம் உடையவர். திடீரென கட்சிக்குள் வந்து, தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் இல்லை. அவர் எல்லா முடிவுகளையும் சிறப்பாக எடுக்கிறார். நிர்வாகிகளிடம், ஆலோசித்தாலும் முடிவை தலைமை தானே எடுக்க வேண்டும்.
ஜெயலலிதாவைப் போல கட்சியின் ஒன் மேன் ஆர்மியாக மாற நினைக்கிறார் பழனிசாமி என்கிறார்களே?
தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மீது இது போன்ற அவச்சொற்கள் விழத்தான் செய்யும். உண்மையில் அவர் அனைவரையும் அரவணைத்துத்தான் செல்கிறார். அனைவருக்கும் உரிய மரியாதை கொடுக்கிறார். அவர் ஒன் மேன் ஆர்மியாக எல்லாம் செயல்படவில்லை.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக-வினருக்கும் தொடர்பு இருப்பதால் தான் நீங்கள் எல்லாம் அடக்கியே வாசிப்பதாகச் சொல்கிறார்களே..?
சொத்துவரி முறைகேட்டை முதலில் வெளிக்கொண்டு வந்ததே நானும், அதிமுக கவுன்சிலர்களும் தான். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறோம். தொடர் ஆர்பாட்டங்களையும் நடத்தி இருக்கிறோம். உண்மை இவ்வாறு இருக்க, நான் அமைதிகாப்பதாக கூறுவது தவறான தகவல்.
சசிகலா, தினகரன், ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுக-வில் சேர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இப்போதும் நீங்கள் எதிர்க்கிறீர்களா?
கட்சிக்கு எது ஆரோக்கியமோ அந்த முடிவை கட்சியின் தலைமை எடுக்கிறது. அதற்கு நான் ஆதரவாக நிற்கிறேன். தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு அதற்கு ஆதரவாக நிற்பது தானே என் போன்ற தொண்டனின் கடமை.
அதிமுக-வில் உள்ள சிக்கல்களை அனுபவம் வாய்ந்த தன்னால் மட்டுமே தீர்க்க முடியும் என்கிறாரே சசிகலா?
அது அவருடைய கருத்து.
தனது முயற்சியால் 2026-ல் அதிமுக ஆட்சி அமையும் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் சசிகலா, அதற்காக என்ன முயற்சிகளை எடுக்கிறார் என்று உங்களுக்காவது தெரியுமா?
என்ன முயற்சி மேற்கொள்கிறார் என்று எனக்குத் தெரியாது. பொது வாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்தார். பின்னர் கட்சியை மீட்பேன் என புறப்படுவார். அவ்வப்போது வாய்ஸ் கொடுப்பார். ஆனால், 2026-ல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. அதற்கான அனைத்து வியூகங்களையும் பழனிசாமி அமைத்து வருகிறார்.
ஓபிஎஸ்ஸை பாஜக கூட்டணியை விட்டு விலக்கி வைத்தால் தென் மாவட்டங்களில் தேவரின மக்களின் கோபத்துக்கு அந்தக் கூட்டணி ஆளாகும் என்று சொல்வதை ஆமோதிக்கிறீர்களா?
தனிப்பட்ட ஒருவரால் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதெல்லாம் வதந்தி.
எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் ஆளும் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக அப்படியே இருக்கிறது. ஆனால், அதிமுக – பாஜக கூட்டணி முரண்பாடுகளுடனேயே பயணிப்பதாக தெரிகிறதே?
ஆளுங்கட்சி என்பதால் தான் அந்தக் கூட்டணி நிலைத்திருக்கிறது. அதிகாரத்தை இழக்கும் போது கூட்டணி கட்சிகள், நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்தது போல் சிதறிவிடும். தேர்தலுக்கு 14 நாட்களுக்கு முன்னதாககூட கூட்டணிகள் மாறிய வரலாறுகள் இருக்கின்றன. அதனால் தேர்தல் நெருக்கத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஆனால் திமுக கூட்டணி உருவானதே, எதிர்க்கட்சியாக இருக்கும் போது தானே?
சேரும்போது எதிர்க்கட்சிகளாக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது கூட்டணியாக ஒட்டிக்கொண்டிருப்பதற்கு ஆளுங்கட்சி என்ற பசை தான் காரணம்.
அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு பெயரை மாற்றி லேபிள் ஒட்டி செயல்படுத்துவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகையை 1,500 ரூபாயாக உயர்த்திக் கொடுப்போம் என்கிறீர்கள். இது லேபிள் ஒட்டும் வேலை இல்லையா?
நாங்கள் 2021 தேர்தலின் போதே, குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,500 செலுத்தும் ‘குலவிளக்கு’ திட்டத்தை செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தோம். அதனால் இது லேபிள் ஒட்டும் வேலை இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இவர்களைப் போல் இல்லாமல், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ரூ.1,500 கொடுப்போம்.
2026-ல் தவெக-வுக்கும், திமுக-வுக்கும் இடையில் தான் போட்டி என விஜய் கூறியிருக்கிறாரே?
அது, விஜய் தனது கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் கூறிய வார்த்தைகளே தவிர, அதில் உண்மை இல்லை. ஒரு கட்சியின் மாநாட்டில் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகப் பேசுவதெல்லாம், கள நிலவரமாக மாறிவிடாது. அடுத்த முதல்வராக பழனிசாமி தான் வரவேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.