சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவெக பிரச்சாரத்தின்போது அதிக எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்கள் வந்தது எப்படி என்பது தொடர்பாக தமிழக அரசின் ஊடகச் செயலர் பி.அமுதா, சுகாதாரத் துறைச் செயலர் பி.செந்தில்குமார் ஆகியோர் வீடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தனர்.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக விஜய் சில கருத்து களை வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் ஊடகச் செயலரும், வருவாய்த் துறைச் செயலருமான பி.அமுதா, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சுகாதாரத் துறைச் செயலர் பி.செந்தில்குமார் ஆகியோர் நேற்று தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, விஜய் பிரச்சாரம் தொடர்பான வீடியோ காட்சிகளை காண்பித்து, கூட்ட நெரிசல் நிகழ்வுகளை விவரித்தனர்.
அப்போது அமுதா கூறியதாவது: கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் பகிரப்படுகின்றன. அன்று பிற்பகல் 3 மணி வரை 10,000 பேர்தான் இருந்தனர். ஆனால், விஜய் வந்த பிறகு கூட்டம் படிப்படியாக அதிகரித்து கூடுதலாக 25 ஆயிரம் பேர் கூடியிருப்பார்கள் என்று கருதுகிறோம். அவரது வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வாகனங்களில் வந்துள்ளனர். அன்று காலை முதலே காத்திருந்தவர்களுக்கு தண்ணீர்கூட கிடைக்கவில்லை. நீண்ட நேரம் காத்திருந்ததால் நிறைய பேருக்கு தண்ணீர் சத்து குறைவு ஏற்பட்டு சிரமப்பட்டுள்ளனர். நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு இரவு 7.40 மணி முதல் 9.45 மணி வரை, நெரிசலில் சிக்கியவர்கள் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பிரச்சாரத்தின்போது மின்சாரம் தடை செய்யப்பட்டதாக தகவல் பரப்பப்படுகிறது. ஆனால், பிரச்சாரத்தின்போது தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாக மின்சார வாரிய தலைமைப் பொறியாளர் விளக்கம் அளித்திருக்கிறார். மின் விளக்குகளும் அணைக்கப்படவில்லை. கூட்ட நெரிசல் அதிகரித்து,அருகேயிருந்த ஜெனரேட்டர் அறைக்குள் கூட்டம் முண்டியடித்து உள்ளே நுழைய முயன்றபோது ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டது. அதனால்தான் போகஸ் லைட் எரியவில்லை.
கரூர் சம்பவத்தைப் பொருத்தவரை அரசு சார்பில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல, சீனியர் எஸ்.பி. தலைமையில் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறும்போது, “கரூர் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறி அனுமதி கேட்கப்பட்டது. பொதுவாக 50 பேருக்கு ஒரு காவலர் பணியில் அமர்த்தப்படுவது வழக்கம். எனினும், விஜய் கலந்துகொண்ட முந்தைய கூட்டங்களில் கூடிய கூட்டத்தின் அடிப்படையில் 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் நியமித்தோம்.
கூட்டத்தினர் மீது போலீஸ் தடியடி நடத்தியதாக கூறுகிறார்கள். விஜய் கார் பின்னால் வந்த கூட்டம், அவரது கார் நின்றவுடன் முன்பக்கம் முண்டியடித்து வர முயற்சித்ததால், கூட்டத்தை விலக்கவே போலீஸார் முயற்சித்தனர். கூட்டம் அதிகரித்ததால் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்” என்றார்.
சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் கூறியதாவது: திடீரென அதிக எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்கள் எப்படி அங்கு வந்தன என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. நெரிசல் சம்பவம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இரவு 7.14 மணிக்கு அழைப்பு வந்தது. உடனடியாக 7.20 மணிக்கு சம்பவ இடத்துக்கு ஓர் ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது. பின்னர், இரவு 7.15 மணிக்கு அடுத்த அழைப்பு வரவே 7.23 மணிக்கு அடுத்த ஆம்புலன்ஸ் சென்றது. தொடர்ந்து அடுத்தடுத்து அழைப்புகள் வந்ததால், உடனடியாக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. தவெக கட்சி சார்பில் 7, அரசின் 108 ஆம்புலன்ஸ்கள் 6, மற்ற மாவட்டங்களில் இருந்து 33 ஆம்புலன்ஸ்கள் அங்கு சென்றன.
எதற்காக அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது என்று கேட்கிறார்கள். பொதுவாக, அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நிகழும்போது பிரேதப் பரிசோதனை செய்ய காலதாமதமாகும். இது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேதனையை அதிகரிக்கும் என்பதால், நல்லெண்ணத்தில் அடிப்படையில் பிரேதப் பரிசோதனை விரைவாக செய்து முடிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, உள்துறைச் செயலர் தீரஜ்குமார், டிஜிபி (பொறுப்பு) வெங்கட்ராமன் உடனிருந்தனர்.