குன்னூர்: குன்னூரில் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி திமுகவினர் மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கும்போது, அதிமுக பொதுக் கூட்டத்தில் திமுகவை விமர்சனம் செய்ததால், ஒலிபெருக்கியை நிறுத்த கோரி திடீரென்று திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாவின் 117-ம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் அண்ணா சிலைக்கு அதிமுகவினர் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர். பின்னர் அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். சிறிது நேரத்தில் திமுகவினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க காத்திருந்தனர்.
அப்போது, வி.பி.தெருவில் நடந்து வந்த பொதுக் கூட்டத்தில் அதிமுகவினர் குன்னூரில் நடக்கக்கூடிய நகராட்சி அவலங்களை பட்டியலிட்டு திமுகவை விமர்சித்தனர். இதனால், அங்கிருந்த திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆவேசமடைந்த திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ ஆதரவாளர்களான செல்வம், பாரூக், கோவர்த்தனன் உட்பட திமுகவினர், அதிமுக பொதுக் கூட்டத்துக்கு சென்று, ஒலிபெருக்கியை நிறுத்துமாறு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் இரு தரப்பினரையம் சமாதானப்படுத்தினர். ஏற்கெனவே அதிமுக சார்பில் அனுமதி பெற்றிருந்த நிலையில், திமுகவினர் உறுதிமொழி எடுக்கும் வரை அதிமுகவினர் ஒலிபெருக்கியை நிறுத்தினர். பின்னர், திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்தனர். இந்தச் சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.