அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் கடந்த டிச.24-ம் தேதி இரவு இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிச.23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அனைவரும் அறிந்ததே. சம்பவம் நடந்த மறுநாள் (24-ம் தேதி) கோட்டூர்புரம் போலீஸார் ஞானசேகரனைக் கைது செய்கிறார்கள். பின்னர் அன்று மாலை விடுவிக்கிறார்கள். அதன்பிறகு, டிச.25-ம் தேதி ஞானசேகரனை போலீஸார் மீண்டும் கைது செய்கின்றனர். தற்போது, 5 மாதங்கள் கழித்து ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வந்துள்ளது.
முதலில் அவரை ஏன் டிச.24-ம் தேதி விடுவித்தார்கள்? ஆதாரங்களை அழிப்பதற்காகவா? 23-ம் தேதி சம்பவம் முடிந்த சிறிது நேரத்தில் கோட்டூர்புரம் காவல் உதவி ஆய்வாளரைத் தொடர்புகொண்டு ஞானசேகரன் பேசியுள்ளார். அதன்பிறகு 9 நிமிடங்கள் கழித்து அந்த காவல்துறை அதிகாரி ஞானசேகரனை செல்போனில் தொடர்புகொண்டு பேசுகிறார். அந்த காவல்துறை அதிகாரி யார்? என்ற தகவலை 48 மணி நேரம் கழித்து வெளியிடுகிறேன்.
மேலும், அன்றைய தினம், அப்பகுதியைச் சேர்ந்த திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகத்திடம், ஞானசேகரன் செல்போனில் 6 முறை பேசி உள்ளார். அதன்பிறகு, சண்முகமும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பேசுகிறார்கள். அதைத்தொடர்ந்து, இன்னொரு காவல்துறை உயர் அதிகாரியிடம் கோட்டூர் சண்முகம் பேசுகிறார். யாரை காப்பாற்றுவதற்கு இவர்கள் இவ்வளவு பதற்றம் அடைந்திருக்கிறார்கள்? இதேபோல், கோட்டூர் சண்முகமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றக் கூடிய நடராஜன் என்பவரும், டிச.23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 13 முறை செல்போனில் பேசியிருக்கிறார்கள்.
டிச.24-ம் தேதி 2 காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவியிடம் எஃப்ஐஆர் வேண்டாம், உன் வாழ்க்கை கெட்டுவிடும் என பேசியிருக்கிறார்கள். எனவே, கோட்டூர் சண்முகம், இவரிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். டிச.24-ம் தேதிதான் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. அன்றைய தினம்தான் ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், யார் அந்த சாரும்? டிச.24-ம் தேதிதான் ஒளிந்திருக்கிறார். நான் யாருக்கும் பயப்பட போவதில்லை. இத்துடன் இதை விடப்போவதில்லை. அடுத்த 48 மணி நேரம் கழித்து மற்ற தகவலை வெளியிடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணாமலை வெளியிட்ட வீடியோவை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், ‘‘டிச.24-ம் தேதி காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட குற்றவாளி ஞானசேகரன் ஏன் உடனடியாக விடுவிக்கப்பட்டார்? டிச.23-ம் தேதி நடந்த பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு ஞானசேகரன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த போலீஸ் அதிகாரி யார்? அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக வட்ட செயலாளர் கோட்டூர் சண்முகம், அண்ணா பல்கலை. ஊழியர் நடராஜனிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணை எஃப்ஐஆர் கொடுக்க வேண்டாம் என போலீஸ் தடுத்தது ஏன்? எஃப்ஐஆரை கசியவிட்டது ஏன்? மே.16-ம் தேதி போடப்பட்ட எஃப்ஐஆர் விவரங்கள் என்ன? இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? பதிலுக்காக காத்திருப்போம்’’ என குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்: சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தை யாராலும் ஏற்க முடியாது. காவல் துறை சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு, 5 மாதங்களில் மிகப்பெரிய தண்டனையை பெற்றுத் தந்துள்ளது. காவல் துறையின் செயல்பாட்டுக்கு நீதிபதியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வட்டச் செயலாளர் சண்முகம் எனக்கு போன் செய்தார் என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா? நான் ஒரு மாவட்டச் செயலாளர். எனது தலைமையில் உள்ள நிர்வாகத்தில் 82 வட்டச் செயலாளர்கள் உள்ளனர். தினமும் எனக்கு 10, 15வட்டச் செயலாளர்கள் போன் செய்கின்றனர். இந்த தேதியில், இந்த நேரத்தில் வட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியனுக்கு போன் செய்துள்ளார் எனவும், மா.சுப்பிரமணியனை விசாரிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை சொல்கிறார். இது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, “அண்ணாமலை குற்றச்சாட்டு சொல்லாத நாளே இல்லை. ஆதாரம் இருந்தால் அவர் வெளியிடலாம். நீதிமன்றத்தை அணுகலாம். எங்களுக்கு பயம் இல்லை. எது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.